பரமக்குடியில் திருட்டு மணலில் வீடு கட்டுவதாக கூறி லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது - தாசில்தார் தலைமறைவு


பரமக்குடியில் திருட்டு மணலில் வீடு கட்டுவதாக கூறி லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது - தாசில்தார் தலைமறைவு
x
தினத்தந்தி 3 Jan 2020 10:45 PM GMT (Updated: 3 Jan 2020 10:33 PM GMT)

பரமக்குடியில் திருட்டு மணலில் வீடு கட்டுவதாக கூறி லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி,

பரமக்குடி எமனேசுவரம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் சேகர். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டின் முன்பு ஆற்று மணல் கொட்டப்பட்டு உள்ளதாக பரமக்குடி தாசில்தார் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பரமக்குடி நகர் வருவாய் ஆய்வாளர் ராம்குமார் அங்கு சென்று பார்வையிட்டார்.

பின்பு திருட்டு மணலில் வீடு கட்டுவதாகக் கூறி ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள் ளார். அதனைத் தொடர்ந்து சேகர் சில நாட்களுக்கு முன்பு முதல் தவணையாக ரூ.8 ஆயிரம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் 2-வது முறையாக ரூ.7 ஆயிரம் கேட்டு வருவாய் ஆய்வாளர் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு சேகர் புகார் கொடுத்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயன பொடி தடவி கொடுத்த பணத்தை சேகர் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை இருந்த வருவாய் ஆய்வாளர் ராம்குமாரிடம் கொடுத்துள்ளார்.

அதனை வருவாய் ஆய்வாளர் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கையும், களவுமாக ராம்குமாரை பிடித்தனர்.

அதனை தொடர்ந்து அவரிடம் தாலுகா அலுவலக அறை ஒன்றில் வைத்து விசாரனை நடத்தினர். அப்போது அவர் தாசில்தார் பணம் வாங்கி வரச்சொன்னதால் தான் நான் சேகரிடம் சென்று பணம் வாங்கினேன் என்று தெரிவித்தாராம்.

இதைத் தொடர்ந்து தாசில்தார் சதீஷ்குமாரை விசாரிக்க முயன்றபோது அவர் அலுவலகத்தில் இல்லாததுடன் அவரது செல்போன் தொடர்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் தாசில்தார் சதீஷ்குமார், வருவாய் ஆய்வாளர் ராம்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.

Next Story