புதுச்சேரி திலாஸ்பேட்டையில் துணிகரம்: அடகு கடையில் 8 கிலோ நகைகள் கொள்ளை


புதுச்சேரி திலாஸ்பேட்டையில் துணிகரம்: அடகு கடையில் 8 கிலோ நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 3 Jan 2020 11:45 PM GMT (Updated: 3 Jan 2020 11:52 PM GMT)

புதுவை திலாஸ்பேட்டையில் பூட்டுக்களை உடைக்காமலே நகை அடகு கடையில் 8 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

புதுச்சேரி, 

புதுச்சேரி காமராஜர் நகர் 45 அடி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் குமார் ஜெயின் (வயது 51). தொழிலதிபர்.

இவருக்கு திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் சொந்தமாக நகை அடகு கடைகள் உள்ளன. திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவில் உள்ள கடை 30 ஆண்டு களுக்கு முன் தொடங்கப்பட்டதாகும்.

இந்த கடையை ராகேஷ்குமார் ஜெயின், அவரது மகன் சுபாஷ் கோஷ் ஆகிய 2 பேரும் கவனித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வியாபாரத்தை முடித்து விட்டு அடகு கடையை மூடி விட்டு சென்றனர்.

நேற்று காலை ராகேஷ் குமார் ஜெயின் அடகு கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க கதவுகளில் இருந்த பூட்டுகள் அனைத்தும் திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது உள் அறையில் இருந்த லாக்கரும் திறந்து கிடந்தது. அதில் வைத்து இருந்த 8 கிலோ எடையுள்ள சுமார் ரூ.2½ கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ.2லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராகேஷ்குமார் ஜெயின் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தார். திலாஸ்பேட்டை கடை மட்டுமின்றி தனது மற்ற கடைகளில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த நகைகளையும் இங்கு கொண்டு வந்து வைத்து இருந்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், வடக்கு போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ், கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த அடகுக் கடைக்கு சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

கொள்ளை சம்பவம் பற்றி தகவலறிந்து அங்கு ஏராளமானவர்கள் கூடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர்.

கொள்ளை நடந்த கடையில் வெளிப்புற கிரில் கேட், உள்புற கதவு, லாக்கர் ஆகியவற்றில் போடப்பட்டிருந்த மொத்தம் 14 பூட்டுகளையும் திறந்தே மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே நன்கு தெரிந்த நபர்கள் தான் அவரது திலாசுபேட்டை கடை சாவிகளை போல் கள்ளச்சாவி தயாரித்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இந்த துணிகர கொள்ளை குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அவற்றில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நெருக்கமாக வீடுகள் உள்ள பகுதியிலேயே மர்ம நபர்கள் அடகு கடையில் புகுந்து கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story