விளையாட்டு விபரீதமானது: துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் 5-ம் வகுப்பு மாணவி சாவு


விளையாட்டு விபரீதமானது: துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் 5-ம் வகுப்பு மாணவி சாவு
x
தினத்தந்தி 4 Jan 2020 11:15 PM GMT (Updated: 4 Jan 2020 10:21 PM GMT)

சுரண்டை அருகே, வீட்டில் விளையாடியபோது துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் 5-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள்.

சுரண்டை,

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆனைகுளம் காந்திநகர் முதல் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து. தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு வீரமாணிக்கம் (வயது 10) உள்பட 3 மகள்கள். வீரமாணிக்கம் அங்குள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று மதியம் சுடலைமுத்து வேலை வி‌‌ஷயமாக வெளியே சென்று விட்டார். செல்லம்மாள் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் வாங்க சுரண்டைக்கு சென்று இருந்தார்.

பரிதாப சாவு

இந்த நிலையில் வீட்டில் இருந்த வீரமாணிக்கம் தனது தங்கைகள் 2 பேருடன் பொம்மலாட்டம் போல் விளையாடிக் கொண்டிருந்தாள். அதாவது, துப்பட்டாவின் ஒரு முனையை கொடியில் கட்டிக்கொண்டும், மற்றொரு முனையை தனது கழுத்தில் சுற்றியபடி விளையாடினாள். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் வீரமாணிக்கம் மயங்கி விழுந்தாள்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவளது தங்கைகள் இதுகுறித்து உறவினர்களிடம் சென்று கூறினர். உடனே அவர்கள் விரைந்து வந்து, வீரமாணிக்கத்தை ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவள் பரிதாபமாக இறந்தாள்.

சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீசார், வீரமாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொம்மலாட்டம் போல் விளையாடியபோது ஏற்பட்ட விபரீதத்தில் மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story