சுற்றுலா பயணி தவறி விழுந்து சாவு: ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு


சுற்றுலா பயணி தவறி விழுந்து சாவு: ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2020 10:45 PM GMT (Updated: 5 Jan 2020 9:45 PM GMT)

கொல்லிமலை ஆகாய நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணி தவறி விழுந்து இறந்ததன் காரணமாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்து பல்வேறு இடங்களை சுற்றிபார்த்து செல்கின்றனர். கொல்லிமலைக்கு செல்வதற்கு காளப்பநாயக்கன்பட்டி பிரதான சாலையும், அடிவார பகுதியான முள்ளுக்குறிச்சி வழியாக செல்லும் மாற்று பாதை ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பணி ஒருவர் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் உள்ள உயரமான பகுதிக்கு சென்ற போது தடாக பகுதியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இதன் எதிரொலியாக ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலா பயணிகள் மது அருந்தி விட்டு வரக்கூடாது, நீர்வீழ்ச்சியில் பக்கவாட்டு உயரமான பகுதிக்கு செல்ல கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

தீவிர கண்காணிப்பு

மேலும் வார இறுதிநாட்களான சனி, ஞாயிற்றுகிழமைகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் நீர்வீழ்ச்சி பகுதியில் ஒரு வனவர் தலைமையில் 4 வனகாப்பாளர்கள் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல கொல்லிமலையின் மற்றொரு அடிவார பகுதியான திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள புளியஞ்சோலை ஆற்றுக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். எனவே அங்கும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா செய்து உள்ளார்.

Next Story