உன்சூர் தொகுதி இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் தோல்விக்கு யார் காரணம்? மவுனம் கலைத்தார் ஜி.டி.தேவேகவுடா


உன்சூர் தொகுதி இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் தோல்விக்கு யார் காரணம்? மவுனம் கலைத்தார் ஜி.டி.தேவேகவுடா
x
தினத்தந்தி 8 Jan 2020 4:45 AM IST (Updated: 8 Jan 2020 10:40 PM IST)
t-max-icont-min-icon

உன்சூர் தொகுதி இடைத்தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்ததற்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு மவுனம் காத்து வந்த முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா தற்போது பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

மைசூரு,

கர்நாடகத்தில் காலியாக இருந்த 15 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடந்தது. அதில் மைசூரு மாவட்டத்திற்கு உட்பட்ட உன்சூர் தொகுதியும் ஒன்று.

இடைத்தேர்தலில் உன்சூர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார். உன்சூர் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது. இதற்கு முன்பு உன்சூர் தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சி வசம் இருந்தது.

இடைத்தேர்தலில் உன்சூர் தொகுதி பொறுப்பாளராக முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா நியமிக்கப்பட்டு இருந்தார். தேர்தல் தோல்விக்கு கட்சியினர் அவரை குற்றம்சாட்டினர். ஆனால் அவர் அதை மறுத்து வந்தார். மேலும் அதுபற்றி பேசாமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில் மைசூருவில் நேற்று ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஆவேசமாக பேசுவதும், மக்களை பிரித்தாளுவதும் அரசியல் அல்ல. நான், என்னிடம் பேசாமல் இருப்பவர்களையும் அனுசரித்து அரசியல் செய்து வருகிறேன்.

நான் கடந்த இடைத்தேர்தலில் நடுநிலையோடு நடந்து கொண்டேன். இருப்பினும் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார். அது எனக்கு வருத்தம் அளித்தாலும், அவருடைய தோல்விக்கு என்னை குற்றம்சாட்டுவது சரியல்ல. இதேபோல் மைசூரு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலிலும் நான் நடுநிலையோடு நடந்து கொள்வேன்.

நான் அமைதியான முறையில் அரசியல் செய்கிறேன். அதனால்தான் இதுவரையில் மவுனம் காத்தேன். தற்போது என் மவுனத்தை கலைத்துள்ளேன்.

இடைத்தேர்தல் முதற்கொண்டு கட்சியின் அனைத்து பொறுப்புகளையும், வேலைகளையும் முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் செய்து வந்தார். அவரிடமே அனைத்து பொறுப்புகளையும் குமாரசாமி ஒப்படைத்துவிட்டார். என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. கட்சி கூட்டத்திற்கு கூட என்னை அழைக்கவில்லை. நான் மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்தபோதும் கூட என்னுடைய திட்டப்படி எந்த செயலும், கட்சிப் பணிகளும் நடக்கவில்லை. இனிமேல் நடப்பதற்கு சாத்தியமும் இல்லை.

சா.ரா.மகேஷ் யாரை கைகாட்டுகிறாரோ அவரே மைசூரு மேயராக தேர்வு செய்யப்படுவார். அவர் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்கிறாரோ, அந்த கட்சியிடம் கூட்டணி வைக்க குமாரசாமி ஒப்புக்கொள்வார்.

என்னிடம் ஒன்றும் இல்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் யார் மேயர் பதவிக்கு போட்டியிடுகிறாரோ அவருக்கு வாக்களிக்கும் உரிமை மட்டுமே என்னிடம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story