மத்திய அரசை கண்டித்து சேலத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் - 670 பேர் கைது


மத்திய அரசை கண்டித்து சேலத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் - 670 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2020 10:45 PM GMT (Updated: 8 Jan 2020 5:44 PM GMT)

சேலத்தில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 305 பெண்கள் உள்பட 670 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

நாட்டில் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம், சாலை மறியல் நடைபெற்றது.

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் வடமலை, நடராஜன், விமலன், முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தொழிலாளர் நல சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு தேசிய சமூக பாதுகாப்பு நிதியம் உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் உதவி கமி‌‌ஷனர் ஈஸ்வரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்களை போலீஸ் வேன்களில் ஏற்றி நேரு கலையரங்கத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும், அங்கன்வாடி பெண் ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர். அப்போது, அவர்கள் அரசு பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே. ஜி. வகுப்புகளுக்கு அங்கன்வாடி பணியாளர்களை அரசு நியமனம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோ‌‌ஷங்களை எழுப்பினர். அவர்களது போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால் அவர்களும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 305 பெண்கள் உள்பட 670 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அதிகாரிகள், ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து அலுவலக வளாகத்தில் மத்திய அரசை கண்டித்து கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதனால் எல்.ஐ.சி. அலுவலக பணிகள் முடங்கியது. இதேபோல், மத்திய அரசு அலுவலகங்களிலும் சிலரை தவிர மற்ற ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் உள்ளன. இதில், ஆளுங்கட்சியை தவிர எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் ஏராளமானோர் நேற்று வேலைக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். சேலம் உருக்காலையில் பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் உருக்காலையில் பணிகள் பாதிக்கப்பட்டது.

Next Story