தொழிற்சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் வங்கி சேவைகள் முடங்கின; பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின


தொழிற்சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் வங்கி சேவைகள் முடங்கின; பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின
x
தினத்தந்தி 9 Jan 2020 12:27 AM GMT (Updated: 9 Jan 2020 12:27 AM GMT)

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் மும்பையில் வங்கி சேவைகள் முடங்கின. பஸ், ரெயில், ஆட்டோ, டாக்சிகள் வழக்கம் போல் இயங்கின.

மும்பை, 

தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை பங்குகளை விற்கக்கூடாது, வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.சி., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.யூ.டி.யூ.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர்.

மராட்டியத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆளும் கட்சிகளான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் நவநிர்மாண் சேனா, சுவாபிமானி சேத்காரி சங்கட்னா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

மராட்டியத்தில் வேலை நிறுத்தம் காரணமாக வங்கி ஊழியர்கள் பலர் பணியை புறக்கணித்தனர். இதன் காரணமாக பல வங்கிகள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. பண பரிவர்த்தனைகள் முடங்கியது. ஒரு சில இடங்களில் வியாபாரிகள் கடையடைப்பு செய்திருந்தனர். மற்றபடி பெரும்பாலான இடங்களில் கடைகள் திறந்து இருந்தன.

தொழிற்சங்கத்தினர் மத்திய அரசுக்கு எதிராக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மும்பை ஆசாத் மைதானத்தில் பெருந்திரளாக கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மும்பையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன. ஆனால் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்ததை காண முடிந்தது.

நகரின் போக்குவரத்து உயிர்நாடியான மின்சார ரெயில் வழக்கம் போல் இயங்கியது. மோனோ, மெட்ரோ ரெயில்கள் மற்றும் பெஸ்ட் பஸ்களும் எந்த பிரச்சினையும் இன்றி இயங்கின. நகரில் ஆட்டோ, டாக்சிகளும் வழக்கம்போல் ஓடின. டி.வி. தொடர் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் வழக்கம்போல் நடந்தன.

புனே பிம்பிரி- சிஞ்ச்வாட் பகுதியில் தொழிலாளர்கள் பணிக்கு வராததால் 70 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தன.

மற்றபடி தானே, பால்கர், நாக்பூர், கோலாப்பூர் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம் காரணமாக இயல்பு வாழ்க்கையில் பெரியளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

Next Story