மும்பையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம்; தாயை கொன்று உடலை வெட்டி வீசிய மகன் கைது


மும்பையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம்; தாயை கொன்று உடலை வெட்டி வீசிய மகன் கைது
x
தினத்தந்தி 9 Jan 2020 11:46 PM GMT (Updated: 2020-01-10T05:16:55+05:30)

உடல் பாகங்கள் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக பெற்ற தாயை கொலை செய்ததாக அவரது மகனை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர செயல் குறித்த நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பை, 

மும்பை காட்கோபர் மேற்கு கிராட் ரோட்டில் உள்ள அரசு பஸ் பணிமனை அருகில் கடந்த மாதம் 30-ந்தேதி தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் தலை மற்றும் கால்களை தேடிவந்தனர்.

இந்தநிலையில் மறுநாள்(31-ந்தேதி) காட்கோபர் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் ரெக்சின் சீட்டில் சுற்றி வைக்கப்பட்டு இருந்த நிலையில் பெண்ணின் 2 கால்கள் மீட்கப்பட்டன.

இதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் சாந்தாகுருஸ்- செம்பூர் லிங்க் ரோட்டின் கீழே செல்லும் ரெயில்வே தண்டவாள பகுதியில் பெண் ஒருவரின் தலையை மீட்டனர்.

மீட்கப்பட்ட பெண்ணின் தலை அழுகிய நிலையில் இருந்ததால் போலீசாரால் அவரை அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து போலீசார் உடல்பாகங்கள் மீட்கப்பட்ட இடங்களின் அருகில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, 3 இடங்களிலும் ஒரு மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மோட்டார் சைக்கிள் குர்லாவில் உள்ள குடிசைப்பகுதியை சேர்ந்த சோகைல் சேக்(வயது30) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் வீட்டருகே உள்ள ஒருவரிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, சோகைல் சேக்கின் தாயார் கடந்த சில தினங்களாக மாயமாகி இருந்தது தெரியவந்தது. எனவே போலீசார் நேற்று முன்தினம் சோகைல் சேக்கை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில், அவர் தான் பெற்ற தாயை கொலை செய்து, உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள் வெளியாகின.

சோகைல் சேக் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்து உள்ளார். பின்னர் அந்த வேலையை விட்டு விட்டு மும்பை வந்தார். அதன்பிறகு அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை. மேலும் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் சோகைல் சேக்கின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால், சோகைல் சேக்கை அவரது தாய் கண்டித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த மாதம் 28-ந் தேதி இரவு சோகைல் சேக் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். எனவே வழக்கம்போல தாய் அவரை கண்டித்தார். இதில், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சோகைல் சேக் ஆத்திரத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் அவரது கழுத்தை நெரித்து உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எனினும் போதை மயக்கத்தில் இருந்த சோகைல் சேக், தாய் உயிரிழந்தது கூட தெரியாமல் வீட்டில் அவரது உடல் அருகேயே படுத்து தூங்கிவிட்டார். இந்தநிலையில் மறுநாள் காலை எழுந்த அவர் தாய் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் செய்வதறியாது திகைத்த அவர் வீட்டருகே உள்ள தர்காவுக்கு சென்று உள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்து டி.வி. பார்த்து உள்ளார். அப்போது, கிரைம் நிகழ்ச்சி ஒன்றில் குற்றவாளி கொலை செய்தவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியதை பார்த்தார்.

இதையடுத்து அவரும் தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீச முடிவு செய்தார். இதற்காக அவர் தாயின் உடலை 3 பாகங்களாக வெட்டி பார்சல் செய்தார். பின்னர் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு இடங்களில் உடல் பாகங்களை வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்துகொண்டார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சோகைல் சேக்கை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற தாயை மகனே கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story