கோத்தகிரியில் கடும் பனி மூட்டம்: தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்


கோத்தகிரியில் கடும் பனி மூட்டம்: தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்
x
தினத்தந்தி 10 Jan 2020 10:30 PM GMT (Updated: 10 Jan 2020 11:24 PM GMT)

கோத்தகிரியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக தேயிலை செடிகளில் கொப்புள நோய் ஏற்பட்டு வருகிறது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக பச்சை தேயிலை விவசாயம் உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. ஆனால் பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் வடகிழக்கு பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்தது. இதனால் தோட்டங்களில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. தற்போது விலை வீழ்ச்சி இருந்தாலும், மகசூல் அதிகமாக இருப்பதால் ஓரளவுக்கு விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மழை குறைந்து, பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் கடுமையாக உள்ளது. இதனால் தேயிலை செடிகளில் கொழுந்துகள் கருகி வருகின்றன. மேலும் போதிய வெயில் அடிக்காததாலும், கடும் பனிமூட்டம் நிலவுவதாலும் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதனால் கொழுந்துகள், இலைகள் சுருண்டு நிறம் மாறி வருகின்றன. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் ந‌‌ஷ்டம் அடையும் அபாயம் நிலவுகிறது.

இதுகுறித்து கோத்தகிரி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

விலை வீழ்ச்சி இருந்தாலும் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்ததால் ஓரளவு மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் திடீரென தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மகசூல் பாதிக்கிறது. தரமான பச்சை தேயிலையை பறிக்க முடியவில்லை. நோய் தாக்குதல் இருப்பதாக கூறி பறித்த பச்சை தேயிலையையும் தொழிற்சாலைகள் வாங்க மறுக்கின்றன. எனவே கொப்புள நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மானிய விலையில் மருந்துகள் வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு ந‌‌ஷ்டஈடு வழங்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story