திருச்சி தங்கும் விடுதியில் மனைவி, 2 மகன்கள் கழுத்தை அறுத்துக் கொலை - தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர் மருத்துவமனையில் அனுமதி
திருச்சியில் உள்ள தங்கும் விடுதியில் மனைவி, 2 மகன்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மலைக்கோட்டை,
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 47). நகைக்கடை அதிபர். இவரது மனைவி செல்லம்(43), மகன்கள் நிகில் (20), முகில் (14). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் மாலை திருச்சிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் திருச்சி மேலரண் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். திருச்சியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வந்திருப்பதாக அவர்கள் விடுதி மேலாளரிடம் கூறி இருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் ஊரணியில் உள்ள செல்வராஜின் உறவினர் குரு கணேஷ் என்பவருக்கு அவரது செல்போனில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் செல்வராஜ் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குரு கணேஷ் திருச்சியில் உள்ள குறிப்பிட்ட அந்த தங்கும் விடுதிக்கு இரவு 10.30 மணி அளவில் வந்தார். விடுதி ஊழியர்களின் உதவியுடன் செல்வராஜ் தங்கி இருந்த அறைக்கு சென்றார்.
அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது செல்லம், நிகில், முகில் ஆகிய 3 பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். செல்வராஜும் ரத்தக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுபற்றி ஓட்டல் ஊழியர்கள் உடனடியாக கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு செல்வராஜை ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர் சண்முகவேலு ஆகியோர் உடனடியாக அங்கு வந்து கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிகில் மூளை வளர்ச்சி குன்றியவர் என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாகவே செல்வராஜ் மனைவி மற்றும் 2 மகன்களையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story