வாலாஜா அருகே, கடும் பனி மூட்டத்தால் 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் - தி.மு.க.ஒன்றிய செயலாளர் உள்பட 10 பேர் படுகாயம்


வாலாஜா அருகே, கடும் பனி மூட்டத்தால் 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் - தி.மு.க.ஒன்றிய செயலாளர் உள்பட 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 14 Jan 2020 10:45 PM GMT (Updated: 14 Jan 2020 4:08 PM GMT)

வாலாஜா அருகே பனிமூட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இந்த விபத்துகளில் தி.மு.க.ஒன்றிய செயலாளர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

வாலாஜா, 

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா புறநகர் சாலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்கின்றன.

இந்த நிலையில் நேற்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது. வாலாஜாவை அடுத்த அம்மணந்தாங்கல் பைபாஸ் சாலை மேம்பாலத்தில் நேற்று காலை சென்னை நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. கடும் பனிமூட்டத்தால் எதிரே உள்ள பகுதிகள் டிரைவருக்கு சரிவர தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினி லாரி திடீரென மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது.

அந்த வாகனத்தை மீட்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகள் மினி லாரி மீது அடுத்தடுத்து மோதின. இதனால் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் அலறி அடித்து ஓடினர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மினி லாரி மீது மோதி நின்ற லாரிகள் மீது கன்டெய்னர் லாரியும் மோதியது. உடனே கன்டெய்னர் லாரியிலிருந்து டிரைவர் கீழே இறங்கிக்கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் அதிவேகமாக அடுத்தடுத்து வந்த 6 கார்கள் விபத்தில் சிக்கி நின்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து ஒன்றன்மீது ஒன்றாக மோதிக்கொண்டன. இந்த விபத்தால் காருக்குள் சிக்கியவர்கள் பலத்த காயம் அடைந்து கூச்சலிட்டனர்.

தகவலறிந்த வாலாஜா போலீசார், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில் சென்னையிலிருந்து வாணியம்பாடி நோக்கி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் காரில் வந்து கொண்டிருந்தார். வாகனங்கள் மோதி நிற்பதை பார்த்த அவர் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.

இந்த விபத்தில் அணைக் கட்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமாரபாண்டியன் (வயது 45), திமிரியை சேர்ந்த மகாலிங்கம் (46), வெட்டுவானத்தை சேர்ந்த பாலு(63), சேலத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த்(36), குடியாத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ் (28), முத்து (32), கோவையை சேர்ந்த சதீஷ்பாபு (42), வாணியம்பாடியை அடுத்த முல்லை கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(28), ஆற்காடு பகுதியை சேர்ந்த யுவராஜ் (32), விஜயகுமார் (32) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமாரபாண்டியன் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை ராணிப்பேட்டை ஆர்.காந்தி எம்.எல்.ஏ, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டவுடன் போக்குவரத்து சீரானது. ஒரே நேரத்தில் லாரி மற்றும் கார்கள் என 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்ட காட்சி சினிமாவையும் மிஞ்சியதாக இருந்தது.

விபத்து தொடர்பாக வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story