சுற்றுலாத்துறை நடத்திய பொங்கல் விழா; தமிழ் கலாசாரத்தை கண்டு வெளிநாட்டினர் வியப்பு


சுற்றுலாத்துறை நடத்திய பொங்கல் விழா; தமிழ் கலாசாரத்தை கண்டு வெளிநாட்டினர் வியப்பு
x
தினத்தந்தி 15 Jan 2020 3:45 AM IST (Updated: 15 Jan 2020 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் தமிழ் கலாசாரத்தை கண்டுவியந்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நேற்று திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்தது. விழாவில் பங்கேற்க மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வந்ததும், மாணவ–மாணவிகள் பாரம்பரிய கலைநிகழ்ச்சியுடன் அவரை வரவேற்று அழைத்து சென்றனர்.

பின்னர் அங்கு செங்கரும்பு, மஞ்சள் குலை உள்ளிட்ட பொங்கல் பொருட்களுடன் பானையில் பொங்கலிடப்பட்டது. சர்க்கரை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பொய்க்கால் குதிரை, கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மிப்பாட்டு, கோலாட்டம் ஆடி, தாரை தப்பட்டை அடித்து மாணவ–மாணவிகள் அசத்தினர். மேலும் ‘பூமி ஒரு பூந்தோட்டம்’ என்ற தலைப்பில் மாணவ–மாணவிகள் வட்டமாக நின்றபடி கும்மிப்பாட்டு பாடி வலம் வந்தனர்.

சிறிதுநேரத்தில் சுற்றுலாத்துறை வாகனத்தில் பொங்கல் விழா நடக்கும் இடத்திற்கு மெக்சிகோ மற்றும் ஹாலந்து நாட்டை சேர்ந்த 7 பேர் கொண்ட பேராசிரியர், பேராசிரியைகள் வந்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு தமிழ் கலாசாரப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் பொங்கலிட்டு அகமகிழ்ந்தனர்.

தமிழ் கலாசார பொங்கல் விழாவை மாணவ–மாணவிகளுடன் வெளிநாட்டினர் ஆர்ப்பரித்து கொண்டாடினார்கள். பின்னர் அவர்களுக்காகவும் கலை நிகழ்ச்சிகளை மீண்டும் மாணவ–மாணவிகள் நடத்தி காண்பித்தனர்.

தமிழ் கலாசாரம் தங்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டதாகவும், இதுபோன்ற பொங்கல் விழாவை நாங்கள் இதுவரை கண்டதில்லை என்றும், சுற்றுலா வந்த இடத்தில் தமிழர்களோடு இணைந்து பொங்கல் விழா கொண்டாடுவது பெருமையாக இருந்தது என்றும், இது எங்களுக்கு கிடைக்காத அரிய வாய்ப்பு என்றும் வெளிநாட்டினர் வியந்தனர். பொங்கல் விழா கொண்டாட்டங்களை வெளிநாட்டினர் தங்களது கேமராக்களில் படம் எடுத்தும், வீடியோவில் பதிவு செய்தும் மகிழ்ந்தனர்.


Next Story