மாவட்டத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் 1,569 மையங்களில் நடக்கிறது


மாவட்டத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் 1,569 மையங்களில் நடக்கிறது
x
தினத்தந்தி 18 Jan 2020 10:45 PM GMT (Updated: 18 Jan 2020 6:59 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் இன்று 1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.

திருச்சி,

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1,279 மையங்களிலும், மாநகராட்சியில் 247 மையங்களிலும், துறையூர் நகராட்சியில் 20 மையங்களிலும், மணப்பாறை நகராட்சியில் 23 மையங்களிலும் என மொத்தம் 1,569 மையங்களில் சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோவில்களிலும், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையம் மற்றும் முக்கொம்பு போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க 55 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடமாடும் குழுக்கள்

குழந்தைகளை பெற்றோர் அழைத்து வர முடியாத இடங்களில் அவர்களுக்காக 69 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வினியோகிக்கப்பட உள்ளது. திருச்சி ரெயில் நிலையத்தில் ரெயில்களிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

கிராமப்புறங்களில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 469 குழந்தைகளுக்கும், நகர்ப்புறங்களில் 97 ஆயிரத்து 474 குழந்தைகளுக்கும், மேலும் இடம் பெயர்ந்து குடியிருப்போர் மற்றும் நாடோடி குழந்தைகள் 527 பேருக்கும் என மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரத்து 470 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பணியாளர்கள்

முகாமில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அங்கன்வாடி, கல்வித்துறை, உள்ளாட்சி துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 6,650 பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

எனவே திருச்சி மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், தற்போது நடைபெற உள்ள முகாமில் கட்டாயம் சொட்டு மருந்து கொடுப்பது போலியோ நோயில் இருந்து முழு பாதுகாப்பை அளிக்கும். எனவே தாய்மார்கள் அனைவரும் தங்களது பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து மையத்திற்கு அழைத்து சென்று தவறாமல் சொட்டு மருந்து போட்டு பயனடையுமாறு கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சியில்...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 88,542 குழந்தைகளுக்கு 267 இடங்களில் முகாம்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கிட மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் முக்கிய வழிபாட்டு தலங்கள் என 15 இடங்களிலும், 5 நடமாடும் குழுக்கள் மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. எனவே 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும், என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Next Story