காளையார்கோவில் அருகே மஞ்சுவிரட்டு: சீறிப்பாய்ந்த மாடு முட்டி ஒருவர் பலி - 61 பேர் காயம்
காளையார்கோவில் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் பலியானார். 61 பேர் காயமடைந்தனர்.
காளையார்கோவில்,
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கண்டிப்பட்டி கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழா நேற்று காலை நடைபெற்றது. சாத்தரசன்பட்டி பங்குத்தந்தை அருள் ஜோசப் தலைமையில் அருட்தந்தையர்கள் ஜோஸ்வா, ஸ்தனிஸ்லாஸ் ஆகியோர் இணைந்து சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர். அதைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்டோர் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் வைத்துக் கொண்டவர்கள் தங்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் கட்டி சுமந்து ஆலயத்தைச் சுற்றி வந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
மதியம் 2 மணியளவில் கிராம பெரியவர்கள் கோவில் காளையுடன் மஞ்சுவிரட்டு தொழுவத்தை சுற்றி வந்ததை தொடர்ந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 120-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. ஆங்காங்கே மாடுகள் அவிழ்த்து விடப்பட்டதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முதல் உதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த 15 பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மஞ்சுவிரட்டை காண வந்திருந்த திருப்பத்தூர் அருகே கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயராகவன் (வயது 44) என்பவரை சீறிப் பாய்ந்து வந்த ஒரு மாடு முட்டி வீசியது. இதில் கழுத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மஞ்சுவிரட்டைக் காண வந்திருந்த பார்வையாளர்களுக்கு அக்கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் உணவு வழங்கப்பட்டது. இந்த கிராம மக்கள் தங்களின் வீடுகளின் வழியாக செல்லும் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்று விருந்து உபசரிப்பதை ஒரு சிறப்பான மரபாக கடைபிடித்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட மேலூர் அருகே பனையபட்டியை சேர்ந்த காளை ஒன்று கண்டுப்பட்டி அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி உயிரிழந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி தலைமையில் வருவாய்த்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story