சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்


சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 21 Jan 2020 4:00 AM IST (Updated: 21 Jan 2020 12:26 AM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி அரியலூர்- பெரம்பலூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பெரம்பலூர்,

31-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி வட்டார போக்குவரத்துத்துறையினர் சார்பில் ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிவதன் அவசியம் குறித்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் அரியலூர், பெரம்பலூரில் நேற்று நடந்தது. அரியலூரில் நகராட்சி அலுவலகம் முன்பு புறப்பட்ட இரு சக்கர வாகன ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ரத்னா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையில் முடிவடைந்தது. இரு சக்கர வாகன ஊர்வலத்தில் போலீசார், அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், ஓட்டுனர் பயிற்சி மாணவர்கள், பயிற்றுனர்கள் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்டனர். முன்னதாக சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், நகராட்சி ஆணையர் குமரன், முதுநிலை மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணபவா, கிளை மேலாளர் ராம்குமார், உதவி பொறியாளர் சீமான்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

இதேபோல் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் வெங்கடேசபுரம், ரோவர் வளைவு வழியாக சென்று நகராட்சி அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இரு சக்கர வாகன ஊர்வலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், போலீசார், மகளிர் சுய உதவிக்குழுவினர், அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள், ஓட்டுனர் பயிற்சி மாணவர்கள், பயிற்றுனர்கள் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்டனர். அப்போது சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.ராமச்சந்திரன், இளம்பை தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழங்கினர். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கென்னடி (பெரம்பலூர்), தேவராஜன் (மங்களமேடு), ரவி (ஆயுதப்படை), மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார், பெரம்பலூர் அரசு போக்கு வரத்துக்கழக கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், கிளை மேலாளர் ஞானமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத் (நெடுஞ்சாலைத் துறை போக்குவரத்து), சவுந்தர்ராஜன் (நகர போக்குவரத்து), நித்யா (பெரம்பலூர்), சுகந்தி (பாடாலூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story