திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 54½ அடி உயரத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 54½ அடி உயரத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
x
தினத்தந்தி 20 Jan 2020 10:30 PM GMT (Updated: 20 Jan 2020 8:18 PM GMT)

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் புதிய கொடி மரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான கும்பாபிசேகம் அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது.

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கிறது. இந்த கோவிலில் முக்கிய திருவிழாவாக பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுகிறது. இதன் நிறைவாக வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேராட்டம் நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவின்போது மூலவர் வன்மீகநாதர் எதிரில் இரண்டாம் சன்னதியில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு இந்த கொடி மரம் சிறிது சேதம் அடைந்தது. இதனால் இந்த கொடிமரத்தி்னை அகற்றி புதிதாக கொடிமரம் அமைத்திட கோவில் நிர்வாகம் முடிவு எடுத்தது. அதன்படி கடந்த செப்்டம்பர் மாதம் கொடி மரம் பீடத்தில் இருந்து அகற்றப்பட்டது. புதிய கொடி மரம் அமைப்பதற்கு தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டது. இந்த மரம் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டது.

பிரதிஷ்டை செய்யப்பட்டது

அந்த மரம் கிரேன் உதவியுடன் இறக்கப்பட்டு கோவில் மேற்கு கோபுர வாசல் தேவாசிரியர் மண்டபத்தின் எதிரே வைக்கப்பட்டது. ஸ்தபதிகள் உதவியுடன் கலை நயத்துடன் செதுக்கப்பட்டு புதிய கொடி மரம் உருவானது. இந்த கொடிமரத்தின் உயரம் 54½ அடி. அடிப்பாகம் 6½ அடி சுற்றளவு கொண்டதாகும்.

இதனையடுத்து புதிய கொடிமரம் பிரதிஷ்டை நேற்று நடந்தது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூமிக்கு அடியில் தங்கம், வெள்ளி, நவரத்தின கற்கள் வைக்கப்பட்டு கொடி மரம் சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் முழங்கிட பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அதிகாரி கவிதா, பரம்பரை அறங்காவலர் தியாகராஜன், உதவி ஆணையர் வில்வமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள்் கலந்து கொண்டனர்.

அடுத்த மாதம் கும்பாபிஷேகம்

இதனை தொடர்்ந்து அடுத்த மாதம்(பிப்ரவரி) 5-ந் தேதி புதிய கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Next Story