மாவட்ட செய்திகள்

நெய்வேலியில் கலெக்டரின் உதவியாளர் வீட்டில் டிரைவர் மர்ம சாவு + "||" + Mystery of the driver of the Collector's Home in Neyveli

நெய்வேலியில் கலெக்டரின் உதவியாளர் வீட்டில் டிரைவர் மர்ம சாவு

நெய்வேலியில் கலெக்டரின் உதவியாளர் வீட்டில் டிரைவர் மர்ம சாவு
நெய்வேலியில் கலெக்டரின் உதவியாளர் வீட்டில் வேன் டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயமணி(வயது 39). வேன் டிரைவர். இவரது மனைவி சோலை(வயது 37). இவர்களுக்கு சூர்யா(17), சுபாஷ்(15) ஆகிய மகன்களும், அனுஸ்ரீ(12) என்கிற மகளும் உள்ளனர்.


ஜெயமணி, அந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளை தனது வேனில் நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்துச்செல்வார். தினமும் காலையில் மாணவ- மாணவிகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு, 9 மணிக்குள் அவர் வீட்டுக்கு வந்துவிடுவார். ஆனால் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

தற்கொலை

இந்த நிலையில், வடக்கு மேலூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர், ஜெயமணியின் வீட்டுக்கு வந்து சோலையிடம் உங்களது கணவர் நெய்வேலி 18-வது வட்டம் அண்ணாசாலையில் உள்ள சண்முகநாதன் என்பவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், உடல் நெய்வேலி என்.எல்.சி. பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போன சோலை, மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு பிணமாக கிடந்த கணவரின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

இதுகுறித்து அவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மறியலில் ஈடுபட முயற்சி

இதற்கிடையே ஜெயமணியின் உறவினர்கள் வடக்குத்தில் சென்னை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, அவர்களை மறியலில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஜெயமணியின் சாவில் சந்தேகம் உள்ளது. அவரை அடித்து கொலை செய்து விட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கலெக்டரின் உதவியாளர்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

நெய்வேலி 18-வது வட்டத்தை சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நிஷா ஆனந்தி(30). இவர் தனது குழந்தையை நெய்வேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். அதேபோன்று, ஜெயமணியும், வடக்குத்து பகுதியை சேர்ந்த குழந்தைகளை தனது வேனில், நிஷா ஆனந்தி வரும் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் செல்போன் எண்களை பெற்று, பேசி வந்துள்ளனர்.

போனில் பேச மறுப்பு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, ஏதோ காரணத்திற்காக நிஷா ஆனந்தி, ஜெயமணியிடம் போனில் பேசவில்லை. இதுபற்றி கேட்பதற்காக 18-வது வட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஜெயமணி சென்றார். அப்போது, அவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், நிஷா ஆனந்தியை அசிங்கப்படுத்தாமல் விடமாட்டேன் என்று கூறி ஜெயமணி, அங்குள்ள குளியலறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அவரை தூக்கில் இருந்து இறக்கி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு நிஷா ஆனந்தி கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் ஜெயமணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு
காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2. திருக்கழுக்குன்றத்தில் கடன் தொல்லையால் டிரைவர் தற்கொலை
திருக்கழுக்குன்றத்தில் ஊரடங்கால் கடன் தொல்லையால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
3. அதிக போதைக்காக மதுபானத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த கொத்தனார் சாவு
புதுவையில் அதிக போதைக்காக மதுபானத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.
4. தென்காசி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் என்ஜினீயரிங் மாணவர் மின்சாரம் தாக்கி சாவு
தென்காசி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த ஊழியர் சாவு
திருவள்ளூர் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர், மனைவி கண்எதிரே பரிதாபமாக இறந்தார்.