தூய்மையான கிராமங்களுக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் பரிசை அனைத்து ஊராட்சிகளும் பெற வேண்டும் அமைச்சர் பேச்சு


தூய்மையான கிராமங்களுக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் பரிசை அனைத்து ஊராட்சிகளும் பெற வேண்டும் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2020 11:00 PM GMT (Updated: 22 Jan 2020 10:07 PM GMT)

தூய்மையான கிராமத்துக்கு முதல்-அமைச்சரால் வழங்கப்படும் ரூ.5 லட்சம் பரிசை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் பெற வேண்டும் என கடலூரில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர்,

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் வெற்றிபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோருக்கான பயிற்சி முகாம் கடலூரில் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 114 ஊராட்சிகளின் தலைவர், துணை தலைவர் ஆகியோருக்கு கடலூரில் உள்ள காவலர் திருமண மண்டபத்திலும், கம்மாபுரம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 120 ஊராட்சிகளை சேர்ந்த தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோருக்கு கடலூர் டவுன்ஹாலிலும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சிகளின் உதவி இயக்குனர்கள் ஆனந்த், பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

341 பெண் ஊராட்சி தலைவர்கள்

ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவி என்பது தலை சிறந்த பணியாகும். மாவட்டத்தில் 683 ஊராட்சிகளில் 341 பெண்களும், 342 ஆண்களும் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்கள் இருக்க வேண்டும் என்ற மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளையும் தூய்மையாக வைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை, வடிகால், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு செய்து தர வேண்டும். திறந்தவெளி கழிப்பறை என்பது இருக்க கூடாது. தனிநபர் கழிப்பறை கட்டி பயன்படுத்த வேண்டும். இதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத ஊராட்சியாக மாற்றிக்காட்ட வேண்டும்.

கிராமத்தில் வெற்றிடங்களை கண்டறிந்து அதில் மரக்கன்றுகளை நட்டு பசுமை போர்த்தப்பட்ட ஊராட்சிகளாக மாற்ற வேண்டும். இதற்கு தேவையான மரக்கன்று மற்றும் செடிகளை அரசே தரும். கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் தூய்மையான கிராமத்துக்கு முதல்-அமைச்சரால் வழங்கப்படும் ரூ.5 லட்சம் பரிசை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் பெற வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் குளம், குட்டை ஆகியவற்றை தூர்வாரி நீர் வளத்தை பெருக்குவதற்கும், வாய்க்கால்களை தூர்வாரி நீர் தடையின்றி செல்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி அதன்மூலம் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீரை அதிகரிக்க செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மண்வளம் பெருகி உணவு உற்பத்தி அதிகரிக்கும்.

6 மாதத்துக்கு ஒருமுறை

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவிகாலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்தகாலத்தில் 6 மாதத்துக்கு ஒருமுறை பொதுமக்களுக்கு நல்ல பயன் உள்ள திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உங்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம். கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால்தான், மாவட்டம் வளர்ச்சி அடையும், மாவட்டம் வளர்ச்சி அடைந்தால்தான் மாநிலம் வளர்ச்சி அடையும், மாநிலம் வளர்ச்சி அடைந்தால் இந்தியாவில் நம்பர்-1 மாநிலமாக தமிழகம் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஊரக பகுதிகளின் முழுமையான வளர்ச்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளின்பங்கு, கிராம ஊராட்சி நிர்வாகம், மின்னணு பரிவர்த்தனை குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

Next Story