கண்களை துணியால் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிய அரசு பள்ளி மாணவி - கலெக்டர் கந்தசாமி பாராட்டு
கண்களை துணியால் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிய அரசு பள்ளி மாணவியை கலெக்டர் கந்தசாமி பாராட்டினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி முனுகப்பட்டு பகுதியை சேர்ந்தவர் குமரன், பட்டு நெசவு தொழிலாளி. இவருக்கு சுருதி, காஞ்சனா என 2 மகள்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள பள்ளியில் சுருதி 6-ம் வகுப்பும், காஞ்சனா 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுருதி கண்களை துணியால் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவது, முன்னே நடந்து செல்பவர்களை கண்களை கட்டிக்கொண்டு எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் பின் தொடர்ந்து செல்வது, படம் வரைதல், படத்திற்கு வண்ணம் தீட்டுதல், சதுரங்கம் விளையாடுதல், எதிர் இருப்பவர்கள் அணிந்து இருக்கும் ஆடையின் நிறம் என்னவென்று கூறும் தனித்திறமைகள் கொண்டு உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாணவி சுருதியை நேரில் வரவழைத்தார். தொடர்ந்து நேற்று காலை சுருதி தனது தந்தையுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் மாணவி தனது திறமையை கலெக்டர் முன்னிலையில் செய்து காட்டினார். அப்போது மாணவி கண்களை துணியால் கட்டிக்கொண்டு எதிரே நிற்கும் நபர் கையில் வைத்து இருக்கும் பொருள் என்னவென்றும், அவர் அணிந்து இருக்கும் ஆடையின் நிறம் என்னவென்றும் கூறினார்.
மேலும் தான் வரைந்து வைத்திருந்த ஓவியத்திற்கு கண்களை துணியால் கட்டிக்கொண்டு வண்ணம் தீட்டனார். மேலும் முன்னே ஒருவர் நடந்து செல்ல அவரை பின் தொடர்ந்து எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் நடந்து சென்று அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆற்றினார்.
அதுமட்டுமின்றி குறிப்பிட்ட அளவில் 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை கையில் கொடுத்தால் அதையும் மாணவி கண்களை கட்டிக்கொண்டு சரியாக எண்ணி காண்பித்தார். அதைத் தொடர்ந்து கலெக்டர் சைக்கிளில் செல்ல அவரை பின்தொடர்ந்து மாணவியும் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிளில் சென்றார்.
அந்த மாணவியை ஊக்கப்படுத்தும் வகையில் அவருடன், உதவி கலெக்டர் மந்தாகினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம் மற்றும் அதிகாரிகளும் சைக்கிளில் சென்றனர். கண்களை கட்டிக்கொண்டு மாணவி 1 கிலோ மீட்டருக்கு மேல் சைக்கிள் ஓட்டினார். இதனையடுத்து மாணவியை கலெக்டர் உள்பட அரசு உயர் அதிகாரிகள் வாழ்த்தி பாராட்டினர்.
இதுகுறித்து மாணவி சுருதியிடம் கேட்ட போது, கடந்த 4 மாதங்களாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். யோகா பயிற்சி மேற்கொண்டதில் இருந்து எனக்குள் இருந்த இந்த திறமை வெளியே தெரியவந்தது என்றார்.
Related Tags :
Next Story