ஆலத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி


ஆலத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 24 Jan 2020 4:00 AM IST (Updated: 24 Jan 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

ஆலத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியாயினர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ஏழுமலை(வயது 17). இவர் பாடாலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது நண்பரான திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா, அலுந்தழைப்பூரை சேர்ந்த மகாலிங்கம் மகன் கீர்த்தி ராஜ்(15). இதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செட்டிகுளம்- ஆலத்தூர் கேட் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் முன்னால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆலத்தூரை சேர்ந்த ரெங்க நாதன்(40) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ரெங்கநாதன் சாலையோரத்தில் விழுந்ததில் காயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் இருந்து ஏழுமலை மற்றும் அவரது நண்பரும் சாலையின் மையத்தில் விழுந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதற்கிடையே அந்த வழியாக தனியார் டயர் தொழிற்சாலையில் இருந்து ரப்பர் ஏற்றி கொண்டு வந்த லாரி ஏழுமலை, அவரது நண்பர் மீது ஏறி சென்றது. லாரி சக்கரம் ஏறிச் சென்றதில் ஏழுமலை மற்றும் அவரது நண்பரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாடாலூர் போலீசார் காய மடைந்த ரெங்கநாதனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த ஏழுமலை மற்றும் அவரது நண்பர் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்தப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story