பழனி தைப்பூச திருவிழா: பாதயாத்திரை பக்தர்கள் இரவில் நடந்து செல்வதற்கு மின்விளக்குகள் - கலெக்டர் தகவல்


பழனி தைப்பூச திருவிழா: பாதயாத்திரை பக்தர்கள் இரவில் நடந்து செல்வதற்கு மின்விளக்குகள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 Jan 2020 10:00 PM GMT (Updated: 23 Jan 2020 11:43 PM GMT)

பழனி தைப்பூச திருவிழாவையொட்டி பாதயாத்திரை பக்தர்கள் இரவில் நடந்து செல்வதற்கு வசதியாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி கூறினார்.

திண்டுக்கல்,

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த பக்தர்கள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நடைபாதை மற்றும் சாலையோரத்தில் நடந்து செல்கின்றனர்.

எனவே, பாதயாத்திரை பக்தர்கள் விபத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, ஒளிரும் குச்சிகள் மற்றும் ஒளிரும் பட்டைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் சார்பில் ஒட்டன்சத்திரத்தில், பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகளை நேற்று கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

பழனி தைப்பூச திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, போலீஸ், நகராட்சி, மருத்துவத்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதையொட்டி பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் குச்சிகள், ஒளிரும் பட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பக்தர்களுக்காக ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பழனி ஒன்றியங்களில் பொதுக்கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்- பழனி இடையே சேதமான நடைபாதை சரிசெய்யப்பட்டுள்ளது. மேலும் நடைபாதைகள் முடியும் இடத்தில் மணல் மூட்டைகள் வைத்து, ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதேபோல் இரவில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர பக்தர்கள் உணவு சாப்பிடும் இடங்களில் தற்காலிக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் சாலைகளின் ஓரத்தில் குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி கமிஷனர் தேவிகா, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கண்ணன், செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story