தகுதி உள்ள தம்பதியர்கள் தகுந்த ஆவணங்களை காட்டி குழந்தைகளை தத்தெடுக்கலாம் -கலெக்டர் பிரபாகர் தகவல்


தகுதி உள்ள தம்பதியர்கள் தகுந்த ஆவணங்களை காட்டி குழந்தைகளை தத்தெடுக்கலாம் -கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 25 Jan 2020 3:30 AM IST (Updated: 24 Jan 2020 11:55 PM IST)
t-max-icont-min-icon

தகுதி உள்ள தம்பதியர்கள் தகுந்த ஆவணங்களை காட்டி குழந்தைகளை தத்தெடுக்கலாம் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளா்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரியில் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அனந்த ஆசிரமம் சிறப்பு தத்து மையம் இணைந்து நடத்திய சட்ட விரோத தத்தெடுப்பை தடுத்தல் குறித்த புத்தாக்க பயிற்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதி அறிவொளி முன்னிலை வகித்தார்.

முகாமில் கலெக்டர் பிரபாகர் கூறியதாவது:- தத்தெடுத்தல் என்பது பெற்றோரால் கைவிடப்பட்ட, ஒப்படைக்கப்பட்ட குழந்தையை சட்டபூர்வமாக தத்தெடுக்கும் பெற்றோருடைய குழந்தையாக மாற்றும் அரசின் முறையாகும்.

தத்தெடுக்க தேவையான ஆவணங்களாக பிறப்பு சான்றிதழ் (10 அல்லது 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது மாற்று சான்றிதழ்), உடற்தகுதி சான்றிதழ் (கணவன் மற்றும் மனைவி) சான்று, திருமண பதிவு சான்று, விவாகரத்து சான்று, பான் கார்டு, இருப்பிட சான்று (ஆதார் கார்டு), தம்பதியரின் புகைப்படம், ஆண்டு வருமான சான்று, வருமான வரி கட்டியது ஆகிய ஆவணங்களை கொண்டு குழந்தைகளை தத்தெடுக்கலாம்.

மேலும், தத்தெடுக்க தகுதி வாய்ந்த தம்பதியர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் நிலையான திருமண பந்தம் உள்ளவராக இருக்க வேண்டும். கணவன், மனைவி இருவருக்கும் குழந்தையை தத்தெடுப்பதற்கான ஒத்த கருத்தும், முழு விருப்பமும் இருத்தல் வேண்டும். தனித்து வாழும் ஆண், ஒரு குழந்தையை மட்டுமே தத்தெடுக்க முடியும்.

தத்தெடுக்கும் பெற்றோருக்கும், தத்து கொடுக்கப்படும் குழந்தைக்கும் குறைந்தபட்சம் 25 வயது வித்தியாசம் இருத்தல் வேண்டும். திருமணம் ஆகி 3 குழந்தைகளுக்கு மேலுள்ள பெற்றோருக்கு குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை. எனினும், மாற்றுத்திறனாளி குழந்தையை தத்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், அனந்த ஆசிரம நிறுவன தலைவர் சாமுவேல் கோவில்பிள்ளை, குழந்தைகள் நல குழும தலைவர் வின்சென்ட் சுந்தர்ராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், பாதுகாப்பு அலுவலர் சுபா‌‌ஷ் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story