மு.க.ஸ்டாலின் எப்போதும் முதல்-அமைச்சராக முடியாது - சதன்பிரபாகர் எம்.எல்.ஏ. பேச்சு


மு.க.ஸ்டாலின் எப்போதும் முதல்-அமைச்சராக முடியாது - சதன்பிரபாகர் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 24 Jan 2020 10:00 PM GMT (Updated: 24 Jan 2020 9:15 PM GMT)

மு.க.ஸ்டாலின் எப்போதும் முதல்-அமைச்சராக முடியாது என்று பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர் பேசினார்.

பரமக்குடி,

பரமக்குடி நகர் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர்கள் ராமநாதன், கோவிந்தன், சாரதா முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, நகர் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வரதன் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர் பேசியதாவது:- அ.தி.மு.க. என்ற இயக்கத்தை தொடங்கி அதை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்று இரட்டை இலை என்ற வெற்றிச்சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் இருக்கும் வரை தமிழ்நாட்டில் தி.மு.க. தலைதூக்கவே முடியவில்லை. மக்களின் உணர்வுகளை அறிந்து மக்களுக்காகவே ஆட்சி செய்தவர் எம்.ஜி.ஆர். சத்துணவு தந்த சரித்திர நாயகன். அவரின் அரசியல் வாரிசாக உருவெடுத்து முதல்-அமைச்சர்களுக்கெல்லாம் முதல்வராக உருவானார் ஜெயலலிதா.

அ.தி.மு.க. என்ற பேரியக்கத்தை கட்டுக்கோப்புடன் அவர் வழி நடத்தி சென்றார். அடிமட்ட தொண்டனும் பெரிய பதவிக்கு வரும் இயக்கம் தான் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பின்பும் இந்த இயக்கத்தை நல்ல முறையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் வழி நடத்தி செல்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வரும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகி விடலாம் என கனவு காண்கிறார். அது ஒரு போதும் நடக்காது. ஸ்டாலின் எப்போதும் முதல்-அமைச்சராக முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தலைமை கழக பேச்சாளர் கருணாநிதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், நிலவள வங்கி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் வடமலையான், முன்னாள் நகராட்சி தலைவர் ஜெய்சங்கர். மாவட்ட நெசவாளர் அணி அய்யான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

Next Story