கல்வி கட்டணம் செலுத்தாததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு சாவு


கல்வி கட்டணம் செலுத்தாததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு சாவு
x
தினத்தந்தி 26 Jan 2020 4:31 AM IST (Updated: 26 Jan 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

கல்வி கட்டணம் செலுத்தாததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மூலக்குளம்,

புதுவை ரெட்டியார்பாளையம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். மின்துறை ஊழியர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுடைய மகள் தேவிஸ்ரீ (வயது 21). பிச்சைவீரன்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரிக்கு கல்வி கட்டணம் செலுத்தாததால் தேவிஸ்ரீ கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் தனது தந்தையிடம் கல்லூரி கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்தினார். அதற்கு சவுந்தர்ராஜன் விரைவில் செலுத்துவதாக கூறிவிட்டு பணிக்கு சென்றுவிட்டார். இதனால் தேவிஸ்ரீ கல்லூரிக்கு செல்லாமல் சோகத்தில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் தனலட்சுமி அரும்பார்த்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இதனால் தேவிஸ்ரீ மட்டும் வீட்டில் இருந்தார். கல்லூரிக்கு கட்டணம் செலுத்தாததால் விரக்தியில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரவில் சவுந்தர்ராஜன், அவருடைய மனைவி தனலட்சுமி ஆகியோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தேவிஸ்ரீ தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேவிஸ்ரீயை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் தேவிஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி அடைந்து மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story