மாவட்ட செய்திகள்

ஊட்டி அருகே முத்தநாடு மந்தில் ‘மொர்பர்த்’ பண்டிகை கொண்டாடிய தோடர் இன மக்கள் + "||" + Near Ooty Muttanadu Mantel celebrated Morbert's festival Thoder ethnic people

ஊட்டி அருகே முத்தநாடு மந்தில் ‘மொர்பர்த்’ பண்டிகை கொண்டாடிய தோடர் இன மக்கள்

ஊட்டி அருகே முத்தநாடு மந்தில் ‘மொர்பர்த்’ பண்டிகை கொண்டாடிய தோடர் இன மக்கள்
ஊட்டி அருகே முத்தநாடு மந்தில் தோடர் இன மக்கள் ‘மொர்பர்த்’ பண்டிகையை கொண்டாடினர்.
ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரியில் வனப்பகுதிகளை ஒட்டி தோடர், கோத்தர், இருளர், பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் ஆகிய ஆதிவாசி இன மக்கள் வசித்து வருகின்றனர். இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்களின் தலைமை இடமாக முத்தநாடு மந்து கருதப்படுகிறது.

முத்தநாடு மந்தில் மாவட்டம் முழுவதும் 72 மந்துகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் ஒன்று கூடி ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் ‘மொர்பர்த்’ என்று அழைக்கப்படும் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் ஊட்டி அருகே உள்ள முத்தநாடுமந்தில் ‘மொர்பர்த்’ பண்டிகையை தோடர் இன மக்கள் நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். பண்டிகையை முன்னிட்டு தோடர் இன மக்கள் விரதம் இருந்து, மூன்போ என்ற கோவிலில் வழிபட்டனர்.

பின்னர் தோடர் இன மக்கள் மூன்போ கோவிலில் இருந்து ஊர்வலமாக அடையாள்வோ என்ற கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் தரையை நோக்கி குனிந்து வழிபட்டனர். இதையடுத்து தோடர் இன மக்கள் மீண்டும் மூன்போ கோவிலுக்கு சென்று பூசாரி மூலம் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். அதன் பிறகு அவர்கள் ஒவ்வொருவராக காணிக்கை மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அவர்கள் அனைவரும் தங்களது பாரம்பரிய உடையணிந்து இருந்தனர்.

அதனை தொடர்ந்து மூன்போ கோவிலின் முன்பகுதியில் சுற்றி நின்றபடி தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். இந்த பண்டிகையில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு கோவிலுக்கு சென்றனர். அதனை தொடர்ந்து தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. வெண்ணெய் பூசப்பட்ட சுமார் 75 கிலோ எடை கொண்ட கல்லை தோடர் இன இளைஞர்கள் தூக்கி, அதனை தோலில் வைத்து முதுகுக்கு பின்புறமாக கீழே போட்டு அசத்தினார்கள். முத்தநாடுமந்தில் பண்டிகை கொண்டாடப்பட்ட பின்னர் மற்ற மந்துகளில் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.