நெமிலி தாலுகாவில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் - குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு


நெமிலி தாலுகாவில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் - குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 28 Jan 2020 4:00 AM IST (Updated: 28 Jan 2020 2:28 AM IST)
t-max-icont-min-icon

நெமிலி தாலுகாவில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கைமனு கொடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்ச்சந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 420 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

லாலாப்பேட்டை, முகுந்தராயபுரம் கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் முகுந்தராயபுரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் பகுதி 3-ல் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் போது இதை சுற்றியுள்ள கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் இளைஞர்கள் வெளியூர்களுக்கு சென்று வேலை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. சிப்காட் பகுதி 3-ஐ சுற்றியுள்ள கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

ராணிப்பேட்டை அருகே உள்ள கல்புதூர் கிராம பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கல்புதூர் கிராமம், கல்மேல்குப்பம் ஊராட்சியில் உள்ளது. ஊராட்சி நிதி கல்மேல்குப்பத்திற்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கல்புதூர் கிராமத்திற்கு செலவிடப்படுவதில்லை. எனவே கல்புதூர் கிராமத்தை பிரித்து தனி ஊராட்சியாக உருவாக்கி தர வேண்டும் என கூறி உள்ளனர்.

நெமிலி ஒன்றியம் உளியநல்லூர் கிராம பொதுமக்கள், விவசாயிகள் சார்பில் கொடுத்துள்ள மனுவில் உளியநல்லூர், வெள்ளைகுளம், புலித்தாங்கல், கிரு‌‌ஷ்ணாகுளம், உளியநல்லூர் காலனி, மதுரா ஆகிய கிராமங்களில் விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களை சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டுசென்று விற்பனை செய்ய வேண்டி உள்ளது. இதனால் வாகன வாடகை, கமி‌‌ஷன் ஆகியவை போக குறைந்த வருமானமே கிடைக்கிறது. எனவே, நெமிலி தாலுகா பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என கூறி உள்ளனர்.

காவனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவனூரை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் சிகிச்சை பெற 8 முதல் 10 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டி உள்ளது. எனவே காவனூரில் அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ராணிப்பேட்டை அடுத்த அவரக்கரை பகுதியை சேர்ந்த திருநங்கைகள் 11 பேர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 பேருக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

Next Story