கடலூர் முதுநகர் அருகே, கார்கள் மோதல்; வாலிபர் பலி - அரசு அதிகாரிகள் உள்பட 8 பேர் படுகாயம்
கடலூர் முதுநகர் அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் சாலையோரம் நின்ற வாலிபர் பலியானார். மேலும் இந்த விபத்தில் அரசு அதிகாரிகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மாருதி நகரை சேர்ந்தவர் எத்திராஜ் மகன் பார்த்தசாரதி (வயது 40). இவர் கடலூர் வேளாண் துறை அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது காரில் கடலூர் நோக்கி புறப்பட்டார்.
கடலூர் முதுநகர் அருகே அன்னவெளி என்ற இடத்தின் அருகில் சென்றபோது, எதிரே திருச்சியை சேர்ந்த முத்துராமலிங்க சேதுபதி மனைவி லலிதா(38) என்பவர் வந்த காரும், பார்த்த சாரதி ஓட்டி சென்ற காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இதில் லலிதா சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, அங்கு சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் வீரமுத்து (28), பாலு மகன் பால்ராஜ்(25), லட்சுமணன் மகன் சத்தியமூர்த்தி(29), காமராஜ் மகன் அஜித்(24) மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த எஸ்.புதூரை சேர்ந்த செங்கல்வராயன் மகன் சுப்பிரமணி(39) ஆகியோர் மீது மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வீரமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் பார்த்தசாரதி, கடலூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் லலிதா(38), அவரது உதவியாளர் வெங்கடேஷ்(58), கார் டிரைவர் ஜெயமூர்த்தி (36) உள்ளிட்ட 8 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் படுகாயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்துக்குள்ளான கார்களை போலீசார் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story