மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வெற்றி - அ.தி.மு.க., பா.ம.க.வினர் திடீர் சாலை மறியல்


மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வெற்றி - அ.தி.மு.க., பா.ம.க.வினர் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Jan 2020 10:00 PM GMT (Updated: 30 Jan 2020 2:56 PM GMT)

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த நிலையில் அ.தி.மு.க., பா.ம.க.வினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 10 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவியது. இந்த தேர்தலின் முடிவில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவரும், பா.ம.க.வை சேர்ந்த 3 பேரும் வெற்றி பெற்றனர். தி.மு.க.வை சேர்ந்த 4 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றனர். ஒரு சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றார். கடந்த 11–ந்தேதி நடைபெற இருந்த ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் திடீர் தகராறால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு தி.மு.க. கூட்டணி சார்பில் சுமதியும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க.வை சேர்ந்த பெருமாளும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். கலெக்டர் மலர்விழி மேற்பார்வையில் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன் மறைமுக தேர்தலை நடத்தினார். இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 10 ஒன்றிய குழு கவுன்சிலர்கள் வாக்களித்தனர். தேர்தலின் முடிவில் தி.மு.க.வேட்பாளர் சுமதி 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் பெருமாள் 4 வாக்குகளை பெற்றார். ஒரு வாக்கு செல்லாத வாக்காக மாறியது.

முன்னதாக இந்த தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும்போது அவற்றில் ஒரு வாக்கு சீட்டை பா.ம.க. வேட்பாளர் பெருமாள் எடுத்து தனது வாயில் போட்டதாகவும் இதுதொடர்பாக அவரிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து பா.ம.க. வேட்பாளரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மதிவாணன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க., பா.ம.க. நிர்வாகிகள் மொரப்பூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் வாகனபோக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுவிற்கான துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளராக பெருமாளும், தி.மு.க. கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக ராஜலிங்கம் என்கிற மாதுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 10 ஒன்றியக்குழு கவுன்சிலர்களும் வாக்களித்தனர். அதன்பின்னர் நடந்த வாக்கு எண்ணிக்கையில் பெருமாள், ராஜலிங்கம் என்கிற மாது ஆகிய 2 பேரும் தலா 5 வாக்குகள் பெற்றிருந்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் நடந்த தேர்வில் பா.ம.க. வேட்பாளர் முருகன் ஒன்றியக்குழு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Next Story