புத்துணர்வு முகாமிற்கு சென்ற 3 கோவில் யானைகள் திருச்சி திரும்பின


புத்துணர்வு முகாமிற்கு சென்ற 3 கோவில் யானைகள் திருச்சி திரும்பின
x
தினத்தந்தி 2 Feb 2020 4:30 AM IST (Updated: 1 Feb 2020 10:16 PM IST)
t-max-icont-min-icon

புத்துணர்வு முகாமிற்கு சென்ற 3 கோவில் யானைகள் திருச்சி திரும்பின.

ஸ்ரீரங்கம்,

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோவில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் நலவாழ்வு கருதியும், அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அதற்கு புத்துணர்வு அளிப்பதற்காகவும் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கி நடந்தது. இந்த முகாமில் பங்கேற்க கோவில் யானைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆண்டாள் யானை, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் லட்சுமி யானை, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் அகிலா யானை ஆகிய 3 யானைகளும் கடந்த டிசம்பர் மாதம் திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இம்முகாமில் யானைகளுக்கு தினமும் காலை, மாலை நடைபயிற்சியும், பசுந்தீவனம், சத்தான உணவு, ஊட்டச்சத்துடன் கூடிய இயற்கை மருந்துகளும் வழங்கப்பட்டன.

3 யானைகள் திரும்பின

இந்த நிலையில் புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து முகாமில் பங்கேற்ற யானைகள் அந்தந்த கோவில்களுக்கு திரும்பின. இதில் திருச்சியில் இருந்து சென்ற ஆண்டாள், லட்சுமி, அகிலா ஆகிய 3 யானைகளும் நேற்று அதிகாலை திரும்பின. அவை நேற்று முழுவதும் ஓய்வில் இருந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கோவில் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Next Story