திருமணமாகாமலேயே குழந்தை பெற்ற கல்லூரி மாணவி போலீஸ் நடவடிக்கையால் காதலனை கரம் பிடித்தார்


திருமணமாகாமலேயே குழந்தை பெற்ற கல்லூரி மாணவி போலீஸ் நடவடிக்கையால் காதலனை கரம் பிடித்தார்
x
தினத்தந்தி 2 Feb 2020 4:30 AM IST (Updated: 2 Feb 2020 2:59 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே திருமணமாகாமலேயே கல்லூரி மாணவி குழந்தை பெற்றார். போலீஸ் நடவடிக்கையால் அவர், காதலனை கரம் பிடித்தார்.

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள கடவம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகள் கோகிலா(வயது 20). இவர், தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த செங்கேணி மகன் பரமசிவம்(25) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தனர். இதனால் கோகிலா கர்ப்பமானார். இது பற்றி அவர், பெற்றோரிடம் கூறாமல் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

போலீசார் விசாரணை

உடனடியாக டாக்டர்கள், குழந்தையின் தந்தை பெயரை கேட்டனர். ஆனால் கோகிலா திருதிருவென விழித்தார். இதனால் சந்தேகமடைந்த டாக்டர்கள், திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, விசாரித்தனர். அதன்பிறகுதான் அவர், காதலன் மூலம் தாயானது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பரமசிவத்தை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர், கோகிலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

திருமணம்

இதையடுத்து 2 பேரும் திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு பரமசிவம், மனைவியையும், குழந்தையையும் நன்றாக பார்த்துக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக எழுதி போலீசாரிடம் கொடுத்தார்.

பின்னர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Next Story