துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்
பேரூராட்சி அதிகாரி தரக்குறைவாக பேசியதாக கூறி துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்குளி,
ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலகப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு கோவை காரமடை பகுதியை சேர்ந்த கே.ராஜா என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை சமத்தூர் பேரூராட்சியில் இருந்து பணி மாறுதல் பெற்று ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். கே.ராஜா பொறுப்பேற்ற நாள் முதல் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை ஒருமையில் பேசி வருவதாகவும் தரக்குறைவாக தகாத வார்த்தையில் பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று பணிக்கு செல்லாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செயல் அலுவலரை பணியிட மாறுதல் செய்யும் வரை பணிக்குச் செல்ல மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
இந்த போராட்டம் குறித்து ஈரோடு பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். செயல் அலுவலர் ராஜா மீது பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கு புகார் மனு அளித்து துறைரீதியாக நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளலாம் என பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து பணியாளர்கள் பணிக்கு சென்றனர்.
இதுகுறித்து ஊத்துக்குளி செயல் அலுவலர் ராஜாவிடம் கேட்டபோது, கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் அவர்களின் பணிகளை முறையாக செய்யவில்லை எனவும், துப்புரவு வாகனங்களை ஓட்டுபவர்களின் கவனக்குறைவை சுட்டிக்காட்டியதற்கு அவர்கள் இவ்வாறு புகார் தெரிவிக்கின்றனர் என்றார்.
Related Tags :
Next Story