தொழிலாளி கொலை வழக்கு: வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை - தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளி கொலை வழக்கு: வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை - தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Feb 2020 12:30 PM IST (Updated: 6 Feb 2020 12:15 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நத்தஅள்ளி அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ராமு என்கிற ராமதாஸ் (வயது 45). தொழிலாளி. அதேபகுதியை சேர்ந்தவர் திருமால் (29). இவர் அந்த பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி அந்த பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சூதாட்டம் நடந்தது.

அப்போது அங்கிருந்த திருமாலுக்கும், ராமதாசுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த திருமால், ராமதாசை கல்லால் தாக்கினார். இதில் பின்னந்தலையில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த ராமதாஸ் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக இண்டூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து திருமாலை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்றது.

வழக்கு விசாரணையின் முடிவில் திருமால் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து திருமாலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவானந்தம் நேற்று தீர்ப்பளித்தார்.

Next Story