உலக நடப்பை தெரிந்து கொள்ள பாடத்தை மட்டும் படிக்காமல் ‘தினத்தந்தி’யையும் படிக்க வேண்டும் அமைச்சர் அறிவுரை


உலக நடப்பை தெரிந்து கொள்ள பாடத்தை மட்டும் படிக்காமல் ‘தினத்தந்தி’யையும் படிக்க வேண்டும் அமைச்சர் அறிவுரை
x
தினத்தந்தி 9 Feb 2020 5:00 AM IST (Updated: 9 Feb 2020 12:32 AM IST)
t-max-icont-min-icon

உலக நடப்பை தெரிந்து கொள்ள பாடத்தை மட்டும் படிக்காமல் ‘தினத்தந்தி’யையும் படிக்க வேண்டும் என்று விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவுரை வழங்கினார்.

திண்டுக்கல்,

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மாணவ-மாணவிகளின் நலனுக்காக விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் மற்றும் உதவித்தொகை, புத்தகப்பை, காலணிகள் உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங் கள் வழங்கப்பட்டு வருகிறது.

பாட புத்தகங்கள்

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 90 ஆயிரத்து 950 பேருக்கு கடந்த 2 ஆண்டுகளில் பாடப்புத்தகங்கள், சீருடைகள், கணித உபகரணங்கள் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் மாணவ-மாணவிகள் இடைநிற்றலை தடுக்க சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் (அதாவது நேற்று) புனித மரியன்னை பள்ளி, டட்லி பள்ளி, அண்ணாமலையார் பெண்கள் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 10 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 771 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே மாணவ-மாணவிகள் அரசின் சலுகைகளை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மேலும் பள்ளிப்பாடங்களை மட்டும் படிக்காமல், ‘தினத்தந்தி’ போன்ற நாளிதழ்களையும் தினசரி படித்து உலக நடப்பை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அது மாணவ-மாணவிகள் படிப்பை முடித்துவிட்டு, அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் போது பெரிதும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், அறங்காவலர்கள் தேர்வு குழு தலைவர் பிரேம்குமார், அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.

தொகுதி பிரச்சினைகள்

அதன் பின்னர் நிருபர்கள், அமைச்சரிடம் சில கேள்விகளை எழுப்பினர். அதாவது, நடிகர் விஜய், பா.ஜ.க.வுக்கு ஒத்துழைக்காததாலேயே அவருடைய வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததாக கூறப்படுகிறதே என்று கேட்ட போது, இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் தான் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றார். பின்னர் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக கேட்ட போது, இதுதொடர்பாகவும் அமைச்சர் ஜெயக் குமார் தான் பதிலளிக்க வேண்டும். திண்டுக்கல் தொகுதி பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் மட்டும் என்னிடம் கேள்வி எழுப்புங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுவிட்டார்.


Next Story