சமூக வலைதளங்களில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த தொழிலாளி கைது


சமூக வலைதளங்களில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 12 Feb 2020 3:07 AM IST (Updated: 12 Feb 2020 3:07 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தி அருகே சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட காவல்துறையில் செயல்படும் சமூக ஊடகவியல் பிரிவினர் நேற்று சமூக வலைதளங்களை கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி அருகே சோழசிராமணி மாரப்பம்பாளையத்தை சேர்ந்த குருசாமி (வயது 35) என்பவர் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தார்.

மேலும் போலியாக பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி செல்போன் மூலம் சிறுமிகளின் ஆபாச படங்களை பேஸ்புக்கிலும், வாட்ஸ்-அப்பிலும் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா‌‌ஷ் தலைமையில் போலீசார் குருசாமியை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது செல்போனில் சிறுமிகளின் ஆபாச படங்களை பேஸ்புக், வாட்ஸ்-அப்பில் பதிவேற்றம் செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் விரைவாக நடவடிக்கை எடுத்த மாவட்ட குற்றப்பிரிவு சூப்பிரண்டு சுபா‌‌ஷ் மற்றும் மாவட்ட சமூக ஊடகவியல் பிரிவினரை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.

Next Story