கோபி அருகே பரபரப்பு, நூதன முறையில் மணல் கடத்திய டிராக்டர் சிறைபிடிப்பு


கோபி அருகே பரபரப்பு, நூதன முறையில் மணல் கடத்திய டிராக்டர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 11 Feb 2020 10:45 PM GMT (Updated: 11 Feb 2020 11:09 PM GMT)

கோபி அருகே நூதன முறையில் மணல் கடத்திய டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகளுக்காக 6 மணி நேரம் பொதுமக்கள் காத்திருந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டி.என்.பாளையம், 

டி.என்.பாளையம் அருகே உள்ள பகுதி கொண்டையம்பாளையம். இங்குள்ள பவானி ஆற்றில் இருந்து தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கொண்டையம ்பாளையத்தை அடுத்த கணக்கம்பாளயைம் பூஞ்சோலை வீதி வழியாக சோளத்தட்டு பாரம் ஏற்றிய டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சோளத்தட்டு குச்சிகள் ரோட்டில் விழுந்தது. அதனுடன் சேர்ந்து மணலும் விழுந்தது. இதைக் கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சந்தேகம் அடைந்து டிராக்டரை தடுத்து நிறுத்தினர். உடனே டிராக்டரை ஓட்டி வந்தவர் அதை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் டிராக்டரை சோதனையிட்டனர். அப்போது சோளத்தட்டு பாரத்தின் கீழ் மணல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சோளத்தட்டு பாரம் ஏற்றி செல்வது போல் நூதன முறையில் மணல் கடத்தியது பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனால் மணல் கடத்திய டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

உடனே அவர்கள் இதுகுறித்து கோபி தாசில்தார் மற்றும் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வர தாமதம் ஆனது. இதனால் டிராக்டரை யாரும் எடுத்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக பொதுமக்கள் அங்கு காவல் இருக்க தொடங்கினர்.

பின்னர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கோபி தாசில்தார் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சோளத்தட்டு பாரம் ஏற்றிய டிராக்டர் ஒன்று எங்கள் கிராமம் வழியாக சென்றது. அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் தான் சோளத்தட்டு பாரம் ஏற்றிக்கொண்டு சென்றது. இதில் சந்தேகம் ஏற்படவே நாங்கள் டிராக்டரை இன்று இரவு (அதாவது நேற்று) தடுத்து நிறுத்தினோம். அதில் மணல் இருந்தது. மணல் கடத்துவது தெரியாமல் இருக்க அதன் மீது சோளத்தட்டு பாரம் ஏற்றி சென்று உள்ளனர். கொண்டையம்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் இருந்து தான் இந்த மணல் கடத்தப்பட்டு வந்து உள்ளது. கடத்தப்பட்ட மணல் எங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. எனவே மணலை கடத்தி பதுக்கி வைத்த தோட்ட உரிமையாளர், டிராக்டர் உரிமையாளர், டிராக்டர் டிரைவர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி மணல் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள தோட்டத்தில் அதிகாரிகள் சோதனையிட வேண்டும்,’ என்றனர். இதையடுத்து அதிகாரிகள் அதிகாலை 3 மணி அளவில் தோட்டத்துக்கு சென்றனர். அப்போது தோட்டத்தின் கதவு பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது. இதனால் தோட்டத்தில் மணல் இருக்கிறதா? என்பதை அதிகாரிகளால் சோதனையிட முடியவில்லை.

பின்னர் பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் டிராக்டருக்கு பாதுகாவலாக நிற்க வேண்டாம். டிராக்டரை யாரும் எடுத்து சென்றுவிடாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்படும்,’ என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் டிராக்டரை யாரும் எடுத்து சென்றுவிடாமல் இருக்க அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

அதிகாரிகள் வர 6 மணி நேரம் தாமதமானதால் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காத்திருந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story