துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒருவர் சிக்கினார்; அரசு பஸ்சில் சென்ற போது போலீசார் மடக்கி பிடித்தனர்
தமிழக– கேரள எல்லையில் துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒருவர் சிக்கினார். அவர், குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்சில் சென்ற போது போலீசார் மடக்கி பிடித்தனர்.
களியக்காவிளை,
தமிழக கேரள எல்லையில் அமரவிளை சோதனைச்சாவடி உள்ளது. களியக்காவிளை அருகே உள்ள இந்த சோதனை சாவடியில் கேரளா மதுவிலக்கு போலீசார் பணியில் உள்ளனர். குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்து போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சை மறித்து சோதனை நடத்தப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒருவர் போலீசாரை கண்டதும் பஸ்சின் இருக்கைக்கு அடியில் பதுங்கினார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து சோதனையிட்டனர். அவர் தோளில் தொங்கவிட்டு இருந்த பையில் கை துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 2 தோட்டாக்கள் இருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த நபரை பாறசாலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அந்த நபர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பது தெரிய வந்தது. மேலும் பழைய இரும்பு கடையில், பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் தோட்டா எப்படி வந்தது. தென்காசியை சேர்ந்தவர் எதற்காக குமரி மாவட்டத்துக்கு வந்தார். அந்த தோட்டாவை எதற்காக அவர் தோள் பையில் மறைத்து எடுத்து செல்கிறார் என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக கேரள எல்லையில் களியக்காவிளை சோதனை சாவடியில் சப்–இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏராளமானவர்கள் தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களிலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தமிழக– கேரள எல்லைப்பகுதியில் மீண்டும் ஒருவர் துப்பாக்கி தோட்டாக்களுடன் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story