குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2020 10:30 PM GMT (Updated: 12 Feb 2020 5:56 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக் அலி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது பேசியதாவது:-

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம்(சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு(என்.ஆர்.சி.) கொண்டு வந்ததால் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து போராடக்கூடிய வேகத்தை உருவாக்கி உள்ளது. நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடந்ததன் மூலம் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கிறது. டெல்லி மக்கள் இந்துக்கள் வேறு, இந்துத்துவம் வேறு என்பதை உணர்ந்து உள்ளனர்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தேசிய குடியுரிமை பதிவேடு கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போதைய பா.ஜனதா அரசு அதில் 6 குறிப்புகளை இணைத்து முன்னோர்களின் பிறப்பு சான்று, இருப்பிட சான்றுகளை கேட்டு முஸ்லிம்களை தனிமைப்படுத்துகிறது. இந்த நிலை கடவுள் மறுப்பை கொண்ட திராவிட இயக்கத்தினர் மற்றும் சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்கு மெதுவாக கொண்டு வரப்படும். நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று பேசினார். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் நான் முதலில் குரல் கொடுப்பேன் என்று கூறி உள்ளார்.

ஆனால், முஸ்லிம் சிறுமி கோவில் கருவறையில் பலாத்காரம் செய்யப்பட்ட போதும், மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி முஸ்லிம்களை தாக்கிய போதும் ரஜினிகாந்த் குரல் கொடுக்கவில்லை.

தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வருங்காலத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். எங்களது போராட்டம் சட்டங்களை திரும்ப பெறும் வரை தொடரும். அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், அரசியலமைப்பு சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் அய்யா தர்ம யுக வழிப் பேரவை தலைவர் பாலமுருகன், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை செயலாளர் ஜலாலுதீன், தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக், கணே‌‌ஷ் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story