மாவட்ட செய்திகள்

காரைக்கால்-பாகூர் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு + "||" + Karaikal-pakur Declaration as a Special Agricultural Zone

காரைக்கால்-பாகூர் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு

காரைக்கால்-பாகூர் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு
புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் காரைக்கால்-பாகூர் பகுதிகள் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் காரைக்கால், பாகூர் பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தல், மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் அறிக்கையை திரும்பப்பெறும் தீர்மானத்தை வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் கொண்டுவந்தார்.


அந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் பேசியதாவது:-

புதுவை மற்றும் தமிழக பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தனியார் நிறுவனத்துடன் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் புதுவை மாநிலத்துக்கு ஏற்படும் ஆபத்துகளையும் இழப்புகளையும், பொதுமக்களின் எதிர்ப்புகளையும் சுட்டிக்காட்டி இத்திட்டத்தினை செயல்படுத்தவேண்டாம் என்று சட்டசபையில் கடந்த 23.7.2019 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல் கடந்த 16.1.2020 அன்று மத்திய சுற்றச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் 2006-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையின்படி இவ்வாறான திட்டங்களுக்கான ஆய்வுகளுக்கு முன் அனுமதி பெறவேண்டும் என்பதை மாற்றி இவ்வாறு கடலோர மற்றும் நிலப்பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் முன்அனுமதியை பெற தேவையில்லை என்ற சட்டவிதியினை திருத்தி வெளியிட்டுள்ளது. அதற்கு முன்பு மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசிற்கு இதற்கான வரைவு அறிக்கையினை அனுப்பி கருத்துகளை கேட்கவில்லை.

காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்துவது மாவட்டத்தை பாலைவனமாக்கும் செயல்மட்டுமின்றி விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்க்கையையும் ஒருசேர அழிப்பதற்கு ஒப்பானதாகும். காரைக்கால் மாவட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்தவும், தண்ணீர் உபயோக திறனை அதிகரிக்கவும், நெல் மட்டுமில்லாமல் இதர சிறுதானிய பயிர்கள், தீவன பயிர்கள் மற்றும் பயறு வகைகளை உற்பத்தி செய்ய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஏதுவாகவும், காரைக்கால் மாவட்டம் மற்றும் பாகூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான தேவை உருவாகியுள்ளது. எனவே அவற்றை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கிறேன். மேலும் 16.1.2020 தேதியிட்ட மத்திய அமைச்சகத்தின் அறிவிக்கையினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.

இந்த தீர்மானத்தின் மீது அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. பேசும்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் வேதாந்தா நிறுவனம் இந்தியா விஷன் பவுண்டேசன் என்ற அமைப்புக்கு ரூ.2 கோடி கொடுத்துள்ளது. அதன் நிர்வாகி யார்? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்யவேண்டும். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு சிலர் பசுமை புதுவையாக மாற்றுகிறேன் என்கிறார்கள். கோவையில் ரூ.90 லட்சத்துக்கு வீடு வாங்கிய கதையும் எங்களுக்கு தெரியும். பஞ்சாபில் அவர்கள் மீது வீட்டை காலி செய்ய மறுத்ததாக வழக்கும் உள்ளது. எனவே அத்தகையவர்கள் அடுத்தவர்களுக்கு நியாயம் போதிக்கும் முன்பு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசும்போது, தற்போது ரவுடிகளின் பிடியில் ஏரிகள் உள்ளது. நிலங்கள் அனைத்தும் பிளாட்டுகளாக மாறிவிட்டன. ஏரியை திறந்தால் தண்ணீர் எங்கு போகும்? இனிமேலாவது பிளாட்டுகள் போடுவதை தடுத்து நிறுத்துங்கள் என்றார்.

அமைச்சர் கமலக்கண்ணன் பேசும்போது, காரைக்கால், பாகூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பும் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கீதா ஆனந்தன், வெங்கடேசன் ஆகியோரும் பேசினார்கள்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசு அறிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியதாகவும், இந்தியா விஷன் பவுண்டேசன் என்ற அமைப்புக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் வேதாந்தா நிறுவனம் நிதி கொடுத்தது தொடர்பாக விசாரணையை ஆரம்பிப்போம் என்றும் இந்த தீர்மானத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தந்து விவசாயம் பாதுகாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. காரைக்கால் பஸ் நிலையத்தில் இயங்கும் தற்காலிக மீன் மார்க்கெட் மேற்கூரை சரிந்து விழுந்தது; பெண்கள் உள்பட 12 பேர் காயம்
காரைக்கால் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மீன் மார்க்கெட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் மீனவ பெண்கள் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை