திண்டுக்கல் அருகே கொசவப்பட்டியில் ஜல்லிக்கட்டு: வீரர்களை தூக்கி வீசி பந்தாடிய காளைகள் - 30 பேர் காயம்


திண்டுக்கல் அருகே கொசவப்பட்டியில் ஜல்லிக்கட்டு: வீரர்களை தூக்கி வீசி பந்தாடிய காளைகள் - 30 பேர் காயம்
x
தினத்தந்தி 15 Feb 2020 4:30 AM IST (Updated: 15 Feb 2020 3:59 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே கொசவப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களை, காளைகள் தூக்கி வீசி பந்தாடின. இதில் வீரர்கள் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.

கோபால்பட்டி,

திண்டுக்கல் அருகே கொசவப்பட்டியில் புனித உத்திரியமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு வாணவேடிக்கை, மேள தாளம் முழங்க மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து திரு விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்காக ஊரின் மையப்பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஜல்லிக்கட்டுக்காக திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 660 காளைகள் அழைத்து வரப்பட்டு இருந்தன.

அதேபோல் காளைகளை அடக்குவதற்கு 500 மாடுபிடி வீரர்கள் வந்து இருந்தனர். இதையடுத்து காலை 8 மணிக்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உஷா தலைமையில் வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் காளைகளை துன்புறுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

இதையடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து காளைகளை அனுமதித்தனர். அதேபோல் மாடுபிடி வீரர்கள் 5 சுற்றுகளாக களம் இறங்கினர். இந்த மாடுபிடி வீரர்கள் அனைவரும் மருத்துவக்குழுவினர் பரிசோதனைக்கு பின்னரே மைதானத்துக்குள் அனுமதித்தனர்.

வாடிவாசல் வழியாக மிரட்டும் பார்வையோடு, திமிரான திமிலுடன் காளைகள் துள்ளிப்பாய்ந்து வந்தன. அதற்காகவே வாடிவாசலில் காத்திருந்த வீரர்கள், காளைகள் மீது பாய்ந்து திமிலை பிடித்து அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேநேரம் ஒருசில காளைகள், வீரர்களை நெருங்க விடாமல் நின்று விளையாடியது. மேலும் அடக்க வந்த வீரர்களை கொம்புகளால் தூக்கி வீசி பறக்கவிட்டு பந்தாடியது. இன்னும் ஒருசில காளைகள் வாடிவாசலில் இருந்து ஒரே பாய்ச்சலாக, வீரர்களுக்கு நடுவே புகுந்து யாரிடமும் சிக்காமல் சென்றன. அவ்வாறு வீரர்களின் பிடிக்கு சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள்கள், பித்தளை மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள், கட்டில்கள், மின்விசிறிகள், பீரோக்கள், கியாஸ் அடுப்புகள், குக்கர்கள், ஹெல்மெட்டுகள், நாற்காலிகள் உள்பட பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதற்கிடையே ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்குவதற்கு வீரர்களும், வீரர்களிடம் பிடிபடாமல் தப்பிக்க காளைகளும் மல்லுக்கட்டியதில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஒருசில காளைகள், வீரர்களை 5 அடி உயரத்துக்கு தூக்கி வீசியது. மேலும் சில காளைகள் துள்ளி குதித்தபடி பின்னால் வருபவர்களை கால்களால் உதைத்தது. இதனால் காளைகளிடம் சிக்கிய வீரர்கள், உரிமையாளர்கள் என 30 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மதுரை பாலமேட்டை சேர்ந்த முருகவேல் (வயது 22), திண்டுக்கல் மாவட்டம் அழகம்பட்டியை சேர்ந்த சின்னு (21), அய்யம்பாளையத்தை சேர்ந்த முருகன் (45), செடிப்பட்டியை சேர்ந்த சின்னான் (38) ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டை நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமராஜ், மாவட்ட கவுன்சிலர் விஜயன், தாசில்தார் மீனாதேவி, அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், திரளான மக்கள் பார்வையிட்டனர். 

Next Story