நாமக்கல்லுக்கு பிளஸ்-2 வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டன 10 மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு


நாமக்கல்லுக்கு பிளஸ்-2 வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டன 10 மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 18 Feb 2020 11:00 PM GMT (Updated: 18 Feb 2020 8:03 PM GMT)

நாமக்கல்லுக்கு நேற்று பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வினாத்தாள்கள் லாரி மூலம் கொண்டு வரப்பட்டன. இவை வைக்கப்பட்டு உள்ள 10 மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இந்த ஆண்டு வருகிற மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி முடிவடைகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை 20 ஆயிரத்து 674 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 85 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 208 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கு தேவையான வினாத்தாள்கள் நேற்று நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அவை போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இரவு காவலர்கள்

இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறியதாவது:- பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வினாத்தாள்கள் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டங்களில் தலா 5 இடங்கள் வீதம் மொத்தம் 10 மையங்களில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதுதவிர அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அனைத்து மையங்களுக்கும் இரவு காவலர்களையும் நியமிக்கவும் முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story