போலீஸ் நிலைய அதிகாரிகள் மீதான புகார் தொடர்பாக முறையான விசாரணை நடத்த வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் நிலைய அதிகாரிகளின் மீதான புகார்களின் மீது முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
விருதுநகர்,
தமிழக அரசு போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார் மனுக்கள் மீது தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு நிவாரணம் கிடைக்க போலீஸ் நிலைய அதிகாரிகள் செயல்படவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
புகார் மனுக்கள் அந்த போலீஸ் நிலையத்தின் விசாரணை எல்லையில் இல்லாமல் இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கினை சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் பல சந்தர்ப்பங்களில் போலீஸ் நிலையங்களில் பெறப்படும் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பதும், குற்றம்சாட்டப்பட்டவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், கட்டப்பஞ்சாயத்து செய்வதுமான விதிமுறைகளுக்கு முரணான நடைமுறைகள் அதிகரித்து வருவதாக புகார்கள் கூறப்படுகிறது. இதனால் புகார் மனுதாரர்கள் பாதிக்கப்படுவதோடு சில சந்தர்ப்பங்களில் போலீஸ் நிலையங்களை தவிர்த்துவிட்டு நீதிமன்றங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.
இம்மாதிரியான விதிமுறை மீறலை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.
சமீபத்தில் ஒரு போலீஸ் நிலைய அதிகாரி மீதான புகார் குறித்து உயர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் தரவில்லை என அதற்கான பிரிவை சேர்ந்த போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் புகாருக்கு உள்ளான அதிகாரி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நடைமுறை தவிர்க்கப்பட மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் முறையான விசாரணை, விசாரணைக்குபின் நடவடிக்கை தேவை என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இல்லையேல் நிவாரணம் தேடி போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.
Related Tags :
Next Story