குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது
x
தினத்தந்தி 19 Feb 2020 11:30 PM GMT (Updated: 19 Feb 2020 9:42 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி முஸ்லிம் அமைப்பினர் கிரு‌‌ஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், அனைத்து பள்ளி வாசல் தலைவர்கள், அனைத்து உலமாக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட அரசு காஜி கலீல்அகமத் தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முகமத்அப்துல் பாரூக் வரவேற்றார்.

‌ஷாஹி மஸ்ஜித் தலைவர் முஸ்தாக் அகமத், டவுன் கமிட்டி தலைவர் இர்பானுல்லா உசைனி, த.மு.மு.க. மாவட்ட தலைவர் நூர்முகமது, தி.மு.க. நகர செயலாளர் நவாப், குடியாத்தம் மேல்ஆலந்தூர் மதரஸா நிஸ்வான் நடுநிலைப்பள்ளி தலைவர் பைரோஸ்அகமத், ஜம்இய்யத் உலமா மாவட்ட தலைவர் அல்தப் அகமத் சித்திக், பூரா மஸ்ஜித் துணைத் தலைவர் காதர்உசேன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் அஸ்கர்அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அன்வர்பா‌ஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தன்ஜீமுல் உலமா தலைவர் ‌‌ஷபீர்அகமத் நன்றி கூறினார்.

கோரிக்கை மனு

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை நிறுத்தக் கோரியும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அவர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் பிரபாகரிடம் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story