கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஷயான், மனோஜ் உள்பட 9 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - 4-வது சாட்சியிடம் குறுக்கு விசாரணை


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஷயான், மனோஜ் உள்பட 9 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - 4-வது சாட்சியிடம் குறுக்கு விசாரணை
x
தினத்தந்தி 20 Feb 2020 11:15 PM GMT (Updated: 20 Feb 2020 6:39 PM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக ‌‌ஷயான், மனோஜ் உள்பட 9 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள். 4-வது சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடந்தது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ‌‌ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோ‌‌ஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த 10-ந் தேதி முதல் சாட்சியான காவலாளி கிரு‌‌ஷ்ண தாபா கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. ‌‌ஷயான், மனோஜ் ஆகிய 2 பேரையும் கோவை மத்திய சிறையில் இருந்து போலீசார் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். சம்சீர் அலி தவிர மற்ற 7 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள். மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் 4-வது சாட்சியான கோடநாடு எஸ்டேட் எழுத்தர் ராதாகிரு‌‌ஷ்ணன் வாக்குமூலம் அளித்தார். அவரிடம் அரசு வக்கீல் நந்தகுமார் விசாரணை நடத்தினார்.

வாக்குமூலத்தில் எழுத்தர் ராதாகிரு‌‌ஷ்ணன் கூறும்போது, எஸ்டேட்டில் நடந்த சம்பவத்தை மேலாளர் நடராஜிடம் விவரத்தை தெரிவித்தேன். கொலை தொடர்பாக கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்துக்கு என்னை அழைத்து சென்று விவரங்களை பதிவு செய்ததுடன், கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கு என்னிடம் கையெழுத்து வாங்கினார் என்றார். பின்னர் அவரிடம் எதிர்தரப்பு வக்கீல் ஆனந்த் குறுக்கு விசாரணை செய்தார். விசாரணையில் கோடநாடு எஸ்டேட் பங்களா சாவி யாரிடம் உள்ளது என்று கேட்டார். அதற்கு அவர் சாவி அம்மாவிடம் உள்ளது, இதுகுறித்து மேலாளருக்கு தான் தெரியும் என்றார்.

பங்களா அருகே கேன்டீன் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது, தொழிலாளர்களுக்காக கேன்டீன் இயங்குகிறதா என்று கேள்வி கேட்டார். அதற்கு அவர் சென்னையில் இருந்து வரும் முக்கிய நபர்கள் பங்களாவில் தங்கும்போது, அவர்களுடன் வருகிறவர்களுக்கு மட்டும் கேன்டீன் செயல்படும் என்றார். பஞ்ச விஸ்வகர்மாவுக்கு என்னென்ன மொழி பேச தெரியும் என்ற கேள்விக்கு தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் பேசுவார் என்று ராதாகிரு‌‌ஷ்ணன் பதிலளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற மார்ச் மாதம் 2-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Next Story