விருதுநகர் கலெக்டர் முன்பு சட்டை அணியாமல் போராடிய விவசாயிகள் - குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு


விருதுநகர் கலெக்டர் முன்பு சட்டை அணியாமல் போராடிய விவசாயிகள் - குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Feb 2020 4:00 AM IST (Updated: 22 Feb 2020 1:13 AM IST)
t-max-icont-min-icon

தனியார் கரும்பு ஆலைகளில் இருந்து ரூ.62 கோடி நிலுவை தொகையை பெற்றுத்தரக்கோரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் முன்பு விவசாயிகள் சட்டை அணியாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார், திட்ட அதிகாரி சுரேஷ் மற்றும் விவசாயம், வனத்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராமசந்திரராஜா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சட்டை அணியாமல் அரை நிர்வாண கோலத்தில் வந்தனர். பின்னர் அவர்கள் மேடையில் இருந்த கலெக்டர் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பிற விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது விவசாயிகள், கலெக்டரிடம் கூறியதாவது:-

தனியார் கரும்பு ஆலைகளில் கடந்த 2018-19-ம் நிதி ஆண்டில் கரும்பு கொள்முதல் செய்ததில் விவசாயிகளுக்கு ரூ.14 கோடி நிலுவை தொகை தரவேண்டி உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் ரூ.48 கோடி வரவேண்டி உள்ளது. மொத்தம் ரூ. 62 கோடி நிலுவை தொகை வரவேண்டிய நிலையில் நிலுவை தொகையை பெற்றுத்தருமாறு கடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது தங்களிடம் வலியுறுத்தி கூறியும் நடவடிக்கை இல்லை.

முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் நிலுவை தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாயிகள் வங்கி கடன் செலுத்தவில்லை என்றால் ஜப்தி நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் எங்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகையை பெற்று தருவது குறித்து கண்டுகொள்வதில்லை. எனவே நிலுவை தொகையை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர், உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் நிலுவை தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 

Next Story