நாகை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பேச்சு


நாகை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 22 Feb 2020 11:00 PM GMT (Updated: 22 Feb 2020 7:52 PM GMT)

நாகை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தெரிவித்தார்.

நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அஜீதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட கவுன்சிலர்கள் பேசியதாவது:-

சரபோஜி:- நாகை கீரைக்கொல்லை தெருவில் ரெயில்வே கேட் உள்ளது. சரக்கு ரெயில்கள் மற்றும் பயணிகள் ரெயில்கள் வரும் போது கேட் மூடப்படுவதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியது உள்ளது. எனவே கீரைக்கொல்லை தெருவில் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும். கங்களாஞ்சேரி ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் நாகை தேவநதி உப்பனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.

தார்ச்சாலைகள்

குமாரசாமி:- நாகை மாவட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்து மிகவும் சேமடைந்துள்ளது. எனவே சேதம் அடைந்துள்ள அனைத்து சாலைகளையும் தார்சாலைகளாக மாற்றி தர வேண்டும்.

கவுசல்யாஇளம்பரிதி:- கான்கீரிட் தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதே போல் கடல் நீர் உட்புகுந்து குடிப்பதற்கு பயன் இல்லாமல் மாறி வருகிறது. இதை சரி செய்ய வேண் டும்.

உமாமகேஸ்வரி (தலைவர்): நாகை மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கு அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரப்படும். அதே போல் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மாவட்டத்தில் சேதம் அடைந்துள்ள சாலைகள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்கப்படும் என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.

இதில் ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story