குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி 8-வது நாளாக தொடர் முழக்க தர்ணா


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி 8-வது நாளாக தொடர் முழக்க தர்ணா
x
தினத்தந்தி 23 Feb 2020 12:00 AM GMT (Updated: 22 Feb 2020 10:26 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் முஸ்லிம்கள் நேற்று 8-வது நாளாக தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் இந்த சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்து வருவதோடு, அந்த சட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காமல் முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருப்பூரில் முஸ்லிம் அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக திருப்பூர் இளைஞர் கூட்டமைப்பு, குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியவை சார்பில் தொடர் முழக்க தர்ணா போராட்டம் திருப்பூர் செல்லாண்டியம்மன் படித்துறை அறிவொளி ரோட்டில் தொடங்கியது.

சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு முஸ்லிம் ஆண்களும், பெண்களும் இரவு, பகலாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். கடந்த 15-ந் தேதி தொடங்கிய போராட்டம் நேற்று 8-வது நாளாக தொடர்ந்தது.

போராட்ட பந்தலில் ஆண்களும், பெண்களும் தொழுகை நடத்தியதுடன், சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கினார்கள். இதன்காரணமாக அந்த பகுதியில் திருப்பூர் தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியை தொடர்கிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலமாக போலீசார் போராட்ட நிகழ்வுகளை கண்காணித்து வருகிறார்கள்.

மங்கலம்

மங்கலம் குடியுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தர்ணா போராட்டம் மங்கலம் நால்ரோடு அருகே திருப்பூர் ரோட்டின் சாலையோரத்தில் நடைபெற்றது. இதில் மங்கலம் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

Next Story