பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 25 Feb 2020 11:30 PM GMT (Updated: 25 Feb 2020 6:31 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பிச்சைபிள்ளை முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் இளவரசன், புள்ளியியல் மற்றும் சார்நிலை அலுவலர் சங்க மாநில தலைவர் அந்துவன்சேரல் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கடலூர் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது கடலூர் மாவட்ட கலெக்டர் எடுத்து வரும், ஊழியர் விரோத மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். நடைமுறைகளை மீறிவரும் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். வருவாய்த்துறை முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில், பணி முதுநிலை தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆணைகளை விரைவாக வழங்கவேண்டும்.

பேச்சுவார்த்தை

சிவகங்கை மாவட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர் பாரதிதாசன் இடைக்கால பணி நீக்கத்தை ரத்து செய்யவேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் விரைவில் தீர்வு காண வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள 81 ஆதிதிராவிடர் நலம் தனி வட்டாட்சியர் பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கையினை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் தமிழ்வாணன் உள்பட சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

Next Story