கிராமங்களை மேம்படுத்த ரூ.30 கோடியில் பணிகள் - கலெக்டர் தகவல்


கிராமங்களை மேம்படுத்த ரூ.30 கோடியில் பணிகள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 Feb 2020 9:30 PM GMT (Updated: 25 Feb 2020 6:52 PM GMT)

கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சிவகங்கை,

மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நகர் புறங்களில் உள்ள வசதிகளை கிராமப்பகுதிகளுக்கு வழங்கும் வகையில் தேசிய (ரூர்பன்) திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளும் விழிப்புணர்வு விழா சிவகங்கையை அடுத்த பையூர் கிராமத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், வாணியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி சுரேஸ்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:-

நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் தேசிய ரூர்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து முதல்கட்டமாக 11 மாவட்டங்களை தேர்வு செய்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, மாவட்ட மகளிர் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் ஆவின் நிர்வாகம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு ஆண்டிற்கும் 7 ஊராட்சிகள் தேர்வு செய்து அந்த ஊராட்சிகளில் மத்திய அரசு சார்பில் 60 சதவீத நிதியுதவியும், மாநில அரசு 40 சதவீதம் என நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் ரூ.30 கோடி ஒதுக்கீடு பெற்று ரூர்பன் திட்டம் செயல்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் நடப்பாண்டில் வாணியங்குடி, காஞ்சிரங்கால், சக்கந்தி, சோழபுரம், இடையமேலூர் அரசனிமுத்துப்பட்டி, கொட்டகுடி, கீழ்பாத்தி ஆகிய ஊராட்சிகளில் இத்திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய், கல்வி மேம்பாடு, சுயஉதவிக் குழுக்களுக்கான திறன்மேம்பாடு பயிற்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டு பணிகள், கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம்கள் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், மகளிர் திட்டத்தின் மூலமாக பெண்கள் முன்னேற்றத்திற்கு கூடுதலாக பல்வேறு திட்டங்கள் வழங்கி வருவதுடன் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்படுகிறது. அந்தவகையில் இத்திட்டத்திற்காக 3,493 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் முருங்கை, பப்பாளி, கறிவேப்பிலை மற்றும் பழவகைகளைச் சேர்ந்த 4 மரக்கன்றுகள் என மொத்தம் 7 மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சுயஉதவிக் குழு பெண்களுக்கு 7 வகையான மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கி, ஊராட்சி பகுதியில் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனியம்மாள், ரஜினிதேவி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி மணிமுத்து மற்றும் சோழபுரம், இடைய மேலூர், அரசனிமுத்துப்பட்டி, கொட்டகுடிகீழ்பாத்தி ஆகிய ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story