செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 112 மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகம் தளவாய்சுந்தரம் வழங்கினார்


செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 112 மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகம் தளவாய்சுந்தரம் வழங்கினார்
x
தினத்தந்தி 25 Feb 2020 11:30 PM GMT (Updated: 25 Feb 2020 10:45 PM GMT)

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 112 மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வழங்கினார்.

நாகா்கோவில்,

குமரி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பல்வேறு விழாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 112 மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கும் விழா நாகர்கோவில் கோட்டார் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பள்ளியில் நேற்று நடந்தது.

விழாவுக்கு குமரி மாவட்ட முதுநிலை கோட்ட தபால் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பள்ளி தலைமை ஆசிரியை கமலா வரவேற்றார். விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு, செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்கீழ் 112 மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கி பேசினார்.

சிறப்பான திட்டம்

பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-

செல்வமகள் சேமிப்பு திட்டம் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.250 அல்லது ரூ.1000 வீதம் செலுத்தினால் பெண் குழந்தைகளின் படிப்புக்கு மட்டும் அல்லாது திருமணத்துக்கும் உதவியாக இருக்கும். மாதந்தோறும் செலுத்தும் தொகையை செலவாக நினைக்காமல் சேமிப்பாக நினைக்க வேண்டும். சேமிப்பு கணக்கு புத்தகம் பெற்றுள்ள அனைத்து மாணவிகளும் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் அதை கொடுத்து மாதம்தோறும் பணம் போடும்படி சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ. அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம், அறங்காவலர் குழுதலைவர் சிவகுற்றாலம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், தபால்துறை உதவி கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தங்க மோதிரம்

முன்னதாக ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் ஏற்பாட்டின்பேரில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் அணிவித்தார்.

Next Story