மீன்வளத்துறை அதிகாரிகளின் கெடுபிடியால் சேதுபாவாசத்திரத்தில் 3-வது நாளாக 52 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை


மீன்வளத்துறை அதிகாரிகளின் கெடுபிடியால் சேதுபாவாசத்திரத்தில் 3-வது நாளாக 52 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 27 Feb 2020 11:30 PM GMT (Updated: 27 Feb 2020 7:42 PM GMT)

சேதுபாவாசத்திரத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளின் கெடுபிடியால் 3-வது நாளாக 52 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய 2 இடங்களில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். மற்ற தினங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்வார்கள்.

விசைப்படகுகளுக்கு இரட்டைமடி, சுருக்குமடி, சலங்கை வலை போன்ற வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தற்போது அந்த வலைகளை பயன்படுத்தாமலேயே மற்றவலைகள் மூலம் அதிக அளவு மீன்பிடித்து கரைக்கு வரும் விசைப்படகுகள் மீது இரட்டை மடி வலை பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதேசமயம் தற்போது மீன்மடி, இறால் மடி என இருவகையான வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதாக கூறுகின்றனர். இறால் மடி சிறியதாகவும் மீன் மடி சற்றுப் பெரியதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இதை தவிர்த்து மீன்மடியை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்தால் அதிக அளவில் மீன்கள் மற்றும் சங்காயம் என கூறப்படும் கழிவு மீன்களும் பிடிபடுகின்றன.

கடலுக்கு செல்லவில்லை

மீன்வளத் துறையினர் கடல் உள்ளே சென்று சோதனை செய்யாமல் கரைக்கு கொண்டு வரப்படும் மீன்களை வைத்து வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளனர். மீனவர்கள் மீன் மடியை பயன்படுத்துவதற்கும் மீன்வளத்துறை தடை விதிப்பதாக கூறுகின்றனர். இதனால் இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சேதுபாவாசத்திரம் துறை முகத்தில் மட்டும் உள்ள 52 விசைப்படகுகள் கடந்த 24-ந்தேதி முதல் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில், இரட்டை மடி வலை பயன்படுத்துவதற்கு விசைப் படகுகளுக்கு அரசு தடை விதித்துள்ளது அதேசமயம் அதிக அளவில் மீன்கள் கிடைக்கக்கூடிய தற்போது பயன்படுத்தகூடிய மீன் மடியையும் அரசு பயன்படுத்தக்கூடாது என கூறுகின்றனர். காரணம் அந்த மடியில் அதிகளவு மீன்கள் சிக்குவதால் இரட்டை மடி வலையை பயன்படுத்தியதாக கூறி வழக்கு தொடர்வோம் என மீன்வளத்துறை அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.

ந‌‌ஷ்டம்

இறால் மடியை பயன்படுத்தி மீன்பிடித்தொழில் செய்தால் இறால் வருவாயும் குறைவு. அந்த வலைகளில் அதிக அளவு மீன்களும் கிடைக்காது. எனவே ஒரு முறை கடலுக்கு சென்று வந்தால் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மீனவர்களுக்கு ந‌‌ஷ்டம் ஏற்படுகிறது. எனவே தான் மீன் மடி வலையை பயன் படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் வந்து சோதனை செய்து இரட்டைமடி பயன்படுத்தும் மீனவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் பரவாயில்லை. ஆனால் கரைக்கு வரும் மீன்களின் அளவைப் பொறுத்து வழக்கு தொடர்வோம் என கூறுவது கண்டிக்கத்தக்கது. எனவேதான் கஜா புயலுக்கு முன்பு 90 விசைப்படகுகள் இருந்த சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் தற்போது 52 விசைப்படகுகள் தான் உள்ளது. இந்த 52 விசைப்படகுகளும் 3-வதுநாளாக கடலுக்கு செல்லவில்லை. மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித பலனும் கிடையாது. ஆகவேதான் தீர்வு ஏற்படும் வரை கடலுக்கு செல்வதில்லை என மீனவர்கள் மத்தியில் முடிவெடுத்துள்ளோம் என கூறினார்.

Next Story